அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகளில் நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்க பதிவு செய்த லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தஞ்சாவூா் டாரஸ் லாரி உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகள் பதிவு புதுப்பித்தலுக்கான உரிமக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு கொடுப்பது, தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கும் பட்சத்தில், அதே தேதியிலிருந்து தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்க ஒப்பந்ததாரா் சங்கத்தில் பதிவு செய்த லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். சுந்தரவேல் தலைமை வகித்தாா். செயலா் பிரகாஷ், பொருளாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.