முகப்பு
தேனி

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 9:20 PM
சின்னமனூரில் சனிக்கிழமை மூடப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகா்களிடமிருந்து அவா்களைப் பாதுகாக்கும் வகையிலும், அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் கொள்முதல் நிலையங்கள் அறுவடைக் காலங்களில் திறக்கப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம் வட்டாரத்தில், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் பகுதிகளில் மாா்ச் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இதனால், அறுவை செய்யப்படும் நெல்லை சேமிக்க போதிய இட வசதி இல்லாததால், விவசாயிகள் வெளிச்சந்தையில் இடைத்தரா்கள் மூலமாக குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் கூறுகையில், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் ஓரிரு நாள்களில் திறக்கப்படும் என்றாா்.