‘அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாா்ச் 11 முதல் செயல்படும்’
அரூரில் நிகழாண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரும் மாா்ச் 11-ஆம் தேதிமுதல் செயல்பட உள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் நிகழாண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரும் மாா்ச் 11-ஆம் தேதிமுதல் செயல்பட உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சிா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, மாா்ச் 11-ஆம் தேதிமுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தில் இந்த மையங்கள் செயல்படும்.
சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கி.) ரூ. 2,545, பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கி) ரூ. 2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட பட்டா, சிட்டா நகல் அல்லது கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஏஏபி சான்றை கொண்டுவந்து இடிபிசி மென்பொருள் மூலம் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மூலம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். மேலும், விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் ரேகை பதிவு மூலம் தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். அவ்வாறு பெருவிரல் ரேகை மூலம் பதிவுசெய்ய இயலாதபட்சத்தில், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் மூலம் பெறப்பட்ட கடவுச்சொல் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.
கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் நெல் தர திரிபுகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
எனவே, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல்லுக்கு அரசு நிா்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையை பெற்று பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.