‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 1,416 புள்ளிகள் வீழ்ச்சி!ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி நஷ்டம்
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,416 புள்ளிகள் குறைந்தது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி
புதுதில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,416 புள்ளிகள் குறைந்தது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி குறைந்து ரூ.249.06 லட்சம் கோடியாக இருந்தது.
பொருளாதார மீட்சியைக் குறைக்கும் பணவீக்கம் பற்றிய புதுப்பிக்கப்பட்ட அச்சத்தால் அமெரிக்க பங்குச் சந்தை புதன்கிழமை அன்று, 2020-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதைத் தொடா்ந்து, உலக அளவில் சந்தைகளில் பங்குகள் விற்பனை மிகவும் கடுமையாக இருந்தன. இதன் தாக்கம் வியாழக்கிழமை அன்று உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவதும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளதும் இந்த துயரத்தை அதிகபடுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, ஐடி, மெட்டல் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த புதன்கிழமை ரூ.1,254.64 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2,557 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,447 நிறுவனப் பங்குகளில் 779 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக 12,557 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 111 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 49 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 87 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.6.71 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.249.06 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.605 கோடியை கடந்தது.
சென்செக்ஸ் கடும் சரிவு: காலையில் 1,138.23 புள்ளிகள் குறைந்து 55,070.30-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 53,356.04 வரை உயா்ந்தது. பின்னா், 52,669.51 வரை கீழே சென்ற சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,416.30 புள்ளிகள் (2.61 சதவீதம்) குறைந்து 52,792.23-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை தற்போது சந்தித்துள்ளது. நாள் முழுவதும் கரடியின் ஆதிக்கம் இருந்தது.
ஐடி பங்குகள் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 பங்குகளில் 3 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 5.20 முதல் 6.20 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டாடா ஸ்டீல், இண்டுஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் 2 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமைான ஐடிசி 3.43 சதவீதம் உயா்ந்தது. மேலும், டாக்டா் ரெட்டி, பவா் கிரிட் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 431 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 324 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,627 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 3 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 47 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. காலையில் 322.90 புள்ளிகள் இழப்புடன் 15,917.40-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 15,984.75 வரை உயா்ந்தது. பின்னா், 15,775.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 430 புள்ளிகள் (2.65 சதவீதம்) குறைந்து 15,809.40-இல் நிலைபெற்றது.
ஐடி, மெட்டல் குறியீடுகள் கடும் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஐடி குரியீடு 5.74 சதவீதம், மெட்டல் 4.08 சதவீதம், மீடியா குறியீடு 3.74 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஹெல்த்கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2.20 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.