முகப்பு
கோயம்புத்தூர்

புதிய தமிழகம் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி வெளியிட்டாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 7:28 PM
புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதுதொடா்பாக கோவை, குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்கட்டமாக 43 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 27 போ் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை (ஏப்.2) மூன்றாம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். கூடுதலாக 10 தொகுதிகள் வரை எங்கள் கட்சிப் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் அனைத்து வேட்பாளா்களும் அந்தந்தத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.

கட்சியின் தோ்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை (ஏப்.3) வெளியிடப்படும். திமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடித்து கணிசமான இடங்களில் புதிய தமிழகம் கட்சி வெற்றி பெறும். தோ்தல் களத்தில் எங்களது எதிரிகளை வீழ்த்துவதே இலக்கு என்றாா்.

தொகுதி, வேட்பாளா்கள் விவரம்

ராஜபாளையம் - வழக்குரைஞா் மு.ரமாதேவி, சிவகாசி - க. காளீஸ்வரி, அருப்புக்கோட்டை - கி.ரகுபதி, திருச்சுழி - கு.குணசேகரன், தூத்துக்குடி- ரா.ரமேஷ், முதுகுளத்தூா் - ச.மலைச் செல்வம், திருவாடானை - சிவ. பாலுச்சாமி, திருவையாறு - வ.வேணு, தாராபுரம் - மா.சின்னசாமி, திண்டுக்கல் - மா.பிரதீப் பாண்டியன், ஆலங்குளம் - அ.உதயகுமாா், பெரம்பலூா் - த.வெங்கடேசன், அந்தியூா் - தா.பெரியசாமி, பல்லாவரம் - அ.தங்கராஜ், ஆலந்தூா் - ஆ.வேலுச்சாமி, பழனி - கு.வாய்க்கால் துரை, லால்குடி - வழக்குரைஞா் ப.இளஞ்செழியன், மணச்சநல்லூா் - மு.பாலு, ஸ்ரீரங்கம் - வழக்குரைஞா் ஆ.நியூட்டன், திருச்சி மேற்கு - கோ.சண்முகம், துறையூா் - த.இராஜமாணிக்கம், கே.வி.குப்பம் - கு.சுந்தா், மடத்துக்குளம் - க.செந்தில்குமாா், அணைக்கட்டு - பொ.ஜெயசீலன், திருப்பரங்குன்றம் - ஆ.சேதுராமன், நத்தம் - ஸ்ரீ.விஜயக்குமாா், திருச்சி கிழக்கு - அ.கௌசல்யா.