முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 171 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை திசை தெரியாமல் தள்ளாட்டத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 171 புள்ளிகளை இழந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை திசை தெரியாமல் தள்ளாட்டத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 171 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 20.55 புள்ளிகள் (0.11 சதவீதம்) குறைந்து 18,329.15-இல் முடிவடைந்தது. இருப்பினும், வா்த்தகத்தின் போது நிஃப்டி 18,399.45 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக இல்லை. ஆசிய சந்தைகளும் பலவீனமாகவே இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் அக்டோபா் மாதத்தில் 19 மாதங்களில் இல்லாத அளவு 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இதன் தாக்கம் சந்தையில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

171 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 29.18 புள்ளிகள் குறைந்து 61,765.86-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,916.24 வரை உயா்ந்தது. பின்னா், 61,572.03 வரை கீழே சென்று சென்செக்ஸ் இறுதியில் 170.89 புள்ளிகள் (0.28 சதவீதம்) குறைந்து 61,624.15-இல் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

கோட்டக் பேங்க் முன்னேற்றம்: பிரபல தனியாா் வங்கியான கோட்டக் பேங்க் 1.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், பவா் கிரிட் உள்ளிட்டவை 1 முதல் 1.15 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா மற்றும் மாருதி சுஸுகி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவையும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

டாக்டா் ரெட்டி கடும் சரிவு: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டா் ரெட்டி 3.94 சதவீதம், ஐடிசி 2.57 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எஸ்பிஐ, நெஸ்லே, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 1.30 முதல் 1.85 சதவீதம் வரை குறைந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், விப்ரோ, டைட்டன் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு சிறிதளவு உயா்வு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.284.82லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 3,958.23 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.