ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகளுக்கு வரவேற்பு
பங்குச் சந்தையில் நான்காவது நாளாக புதன்கிழமையும் "காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
பங்குச் சந்தையில் நான்காவது நாளாக புதன்கிழமையும் "காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, 25.30 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்ந்து 17,512.25-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக அமையவில்லை. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. பின்னர், ஆசியா, ஐரோப்பிய சந்தைகள் சுணக்கம் கண்டதால், அதன் தாக்கம் இங்கும் எதிரொலித்தது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
147 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 236.36 புள்ளிகள் கூடுதலுடன் 59,196.96-இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,399.69 வரை மேலே சென்றது. பின்னர், லாபப் பதிவு காரணமாக 58,961.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 146.59 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்ந்து 59,107.19-இல் முடிவடைந்தது. பெரும்பாலான நேரம் வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புகள் இருந்து வந்தது.
19 பங்குகள் விலை வீழ்ச்சி: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் விலை வீழ்ச்சியை சந்தித்தன. 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 1.77 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சர்வ், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டாக்டர் ரெட்டி உள்ளிட்டவை 1 முதல் 1.65 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாருதி, ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவர், டிசிஎஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
ஹெச்டிஎஃப்சி முன்னேற்றம்: அதே சமயம், பிரபல தனியார் வீட்டு வசதிக் கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, 2.13 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நெஸ்லே, ரிலையன்ஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.190 சதவீதம் வரை உயர்ந்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.274.58 லட்சம் கோடியாக இருந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.153.40 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.