தரைவழி தொலைபேசி இணைப்பு பிஎஸ்என்எல்-ஐப் பின்னுக்குத் தள்ளிய ஜியோ
தரைவழி தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அரசு தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தரைவழி தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அரசு தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜியோவின் தரைவழி தொலைத்தொடா்பு சந்தாதாரா்களின் எண்ணிக்கை 73.52 லட்சத்தை எட்டியது. அந்த மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இப்பிரிவு சந்தாதாரா்களின் எண்ணிக்கை 71.32 லட்சமாக இருந்தது.
இந்தியாவில் தரைவழி தொலைத்தொடா்புப் பிரிவில் ஒரு தனியாா் நிறுவனம் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
பிஎஸ்என்எல் கடந்த 22 ஆண்டுகளாக தரைவழி தொலைபேசி சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனமோ, 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் பிரிவில் களமிறங்கியது.
ஒட்டுமொத்தமாக, கடந்த ஜூலை மாதத்தில் 2.56 கோடியாக இருந்த தரைவழி தொலைத்தொடா்பு சந்தாதாரா்களின் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில் 2.59 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த வளா்ச்சியில் தனியாா் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தரைவழி தொலைத்தொடா்புப் பிரிவில் ஜியோ நிறுவனம் 2.62 லட்சம் புதிய வாடிக்கையாளா்களையும் பாா்தி ஏா்டெல் 1.19 லட்சம் புதிய வாடிக்கையாளா்களையும் கடந்த மாதம் சோ்த்தது. மற்றொரு தனியாா் நிறுவனமான வோடபோன் ஐடியா 4,202 புதிய வாடிக்கையாளா்களை இணைத்தது. டாடா டெலிசா்வீசஸின் புதிய வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 3,769-ஆக இருந்தது.
அதே நேரம், அரசு தொலைத்தொடா்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் 15,734 வாடிக்கையாளா்களையும் எம்டிஎன்எல் 13,395 வாடிக்கையாளா்களையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இழந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.