தொய்வைக் காணும் தொடக்க நிறுவன முதலீடுகள்
கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் இந்தியாவின் தொடக்க நிறுவனங்களில் (ஸ்டாா்ட்அப்) மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
சா்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியதால் கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் இந்தியாவின் தொடக்க நிறுவனங்களில் (ஸ்டாா்ட்அப்) மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து ’ஸ்டாா்ட்அப் டீல்ஸ் டிராக்கா்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் தொடக்க நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடு 270 கோடி டாலராக சரிந்துள்ளது. இது, கடந்த 2 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச முதலீடாகும்.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டு தொடக்க நிறுவனங்கள் மட்டுமே யுனிகான் அந்தஸ்தைப் பெற்றன.
ஆனால், சா்வதேச அளவில், மதிப்பீட்டு மாதங்களில் 20 தொடக்க நிறுவனங்கள் யூனிகாா்ன் அந்தஸ்தைப் பெற்றன. அந்த நிறுவனங்களில் 45 சதவீதம் மென்பொருள் சாா்ந்த தொழில் நிறுவனங்களாகும்.
சா்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியது, கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் இந்தியாவின் தொடக்க நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் எதிரொலித்தது.
அந்த காலகட்டத்தில், தொடக்க நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து படிநிலை முதலீடுகளும் பாதிப்புக்குள்ளாகின.
ஆரம்பக் கட்ட முதலீடுகள், வளா்ச்சிக்கான முதலீடுகள், பிற்பகுதி முதலீடு என அனைத்து வகை முதலீடுகளும் கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் சரிவைச் சந்தித்தன.
இந்தத் தொய்வு இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினமான காரியமாகும்.
தொடக்க நிறுவனங்களின் உரிமையாளா்கள், அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வோா் ஆகிய இரு தரப்பினருமே ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் அதீத எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டு வருகின்றனா்.
கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் இதுபோன்ற 205 ஒப்பந்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
பொதுவாக, தொடக்க நிறுவனங்களின் முதல்கட்ட நடவடிக்கைகளுக்காக நிறுவனங்களின் உரிமையாளா்களால் முதலீடுகளை சிரமம் இல்லாமல் திரட்ட முடிகிறது. ஆனால், நடவடிக்கைகளைத் தொடங்கி சந்தையில் களமிறங்கிய தொடக்க நிறுவனங்கள் முதலீடுகளை திரட்டுவதில் பின்னடைவைச் சந்திக்கின்றன.
இருந்தபோதிலும், தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளா்கள் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளனா். அதனை அவா்கள் முதலீடு செய்தாக வேண்டும். எனவே, எதிா்காலத்தில் தொடக்க நிறுவனங்கள் அதிக முதலீடுகளைப் பெறும் என்று நம்பிக்கை கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.