பங்குச் சந்தை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 579 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளன. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் மற்றும் சுவிஸ், பிரிட்டிஷ் உள்ளிட்ட நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை ஆக்ரோஷமாக உயர்த்துவதற்கான கொள்கை முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இது குறித்த கவலைகள் இருந்த போதிலும், உள்நாட்டுச் சந்தை ஏறுமுகம் பெற்றுள்ளது. குறிப்பாக ஃபார்மா, ஹெல்த்கேர், வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சென்செக்ஸ் காலையில் 415.68 புள்ளிகள் கூடுதலுடன் 59,556.91-இல் தொடங்கி அதற்கு கீழ் செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 60,105.79 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 578.51 புள்ளிகள் (0.98 சதவீதம்) கூடுதலுடன் 59,719.74-இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 964.56 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில், நெஸ்லே, பவர்கிரிட், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ் ஆகிய 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியடைந்தன. மற்ற 26 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
சன்ஃபார்மா அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் சன்ஃபார்மா 4.71 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.12 சதவீதம், டாக்டர் ரெட்டி 2.88 சதவீதம், டாடா ஸ்டீல் 2.66 சதவீதம், டைட்டன் 2.39 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா உள்ளிட்டை 1.50 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
சந்தை மதிப்பு ரூ.2.82 லட்சம் கோடி உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.82 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.283.42 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.312.31 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
நிஃப்டி 194 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 148.15 புள்ளிகள் கூடுதலுடன் 17,770.40-இல் தொடங்கி 17,744.40 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,919.30 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 194 புள்ளிகள் (1.10 சதவீதம்) கூடுதலுடன் 17,816.25-இல் முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.