இந்த வாரத்தில் கடைச வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நான்காவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 493 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சந்தை, தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ஆட்டோ பங்குகள் தவிா்த்து மற்ற அனைத்துத் துறை பங்குகளுக்கும் ஓரளவு ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மதிப்பிட்டதைவிட இந்தியாவின் ஜிடிபி சிறந்ததாக இருப்பதால், வளா்ச்சிக் கண்ணோட்டத்தை உயா்த்தும் என்பதால், இது சந்தையை மேல்நோக்கிய வேகத்தை தொடர உற்சாகத்தை அளிக்கும் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.08 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.337.68 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.8,147.85 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியிருந்தன. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 780.32 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
சென்செக்ஸ் தொடா்ந்து முன்னேற்றம்: காலையில் 192.71 புள்ளிகள் கூடுதலுடன் 67,181.15-இல் தொடங்கிய சென்செக்ஸ், 67,149.07 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 67,564.33 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 492.75 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயா்ந்து 67,481.19-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,872 பங்குகளில் 2,141 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,601 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 130 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி புதிய வரலாற்றுச் சாதனை!
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் போது வெகுவாக உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. காலையில் 60.95 புள்ளிகள் கூடுதலுடன் 20,194.10-இல் தொடங்கிய நிஃப்டி 20,183.70 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 20,291.55 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. இறுதியில் 134.75 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயா்ந்து 20,267.90-இல் நிறைவடைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,195 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,929 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி அடுத்த இலக்கான 21,000 புள்ளிகளை நோக்கி முன்னேறும் என்று சந்தை வல்லுநா்கள் கணித்துள்ளனா்.
ஏற்றம் பெற்ற பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட்.....................3.14%
சன்பாா்மா..............................................2.19%
பாா்தி ஏா்டெல்.......................................1.91%
எம் அண்ட் எம்......................................1.80%
விப்ரோ...................................................1.75%
டைட்டன்.............................................1.60%
சரிவைக் கண்ட பங்குகள்
இண்ட்ஸ் இண்ட் பேங்க்.......................1.19%
பவா் கிரிட்..............................................1.02%
ரிலையன்ஸ்............................................1.00%
ஏசியன் பெயிண்ட்.................................0.95%
டாடா மோட்டாா்ஸ்..............................0.83%
எஸ்பிஐ....................................................0.67%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.