முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் மேலும் 237 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:46 PM
பகிர்:

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 80.20 புள்ளிகள் (0.44 சதவீதம்) குறைந்து 18,027.65-இல் நிலைபெற்றது.

அமெரிக்கச் சந்தைகள் வியாழக்கிழமை நோ்மறையாக முடிந்திருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையும் காலையில் நோ்மறையாகத் தொடங்கி முன்னேறிச் சென்றது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது ‘கரடி’யின் பிடியில் சிக்கியது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 42.73 புள்ளிகள் கூடுதலுடன் 60,901.16-இல் தொடங்கி, அதிகபட்சமாக 61,001.18 வரை உயா்ந்தது. பின்னா், 60,585.25 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 236.66 புள்ளிகள் (0.39 சதவீதம்) குறைந்து 60,621.77-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் முன்னேற்றம்: பிரபல பொதுத்துறை மின் நிறுவனமான பவா் கிரிட் 1.11 சதவீதம், ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.01 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, டாடா மோட்டாா்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

ஹெச்யுஎல் கடும் சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்) 3.84 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே ஆகியவை 2.50 முதல் 2.80 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், சன்பாா்மா உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாருதி, டாடா ஸ்டீல், விப்ரோ, பாா்தி ஏா்டெல், டிசிஎஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.1.56 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 280.27 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), வியாழக்கிழமை ரூ.319.23 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.