வணிகம்

சென்செக்ஸ்: மீண்டும் புதிய வரலாற்று உச்சம்! 205 புள்ளிகள் கூடுதலுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நான்காவது நாளாக நேர்மறையாக முடிவடைந்தது.

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நான்காவது நாளாக நேர்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, காலை வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 67,000 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 19,800 புள்ளிகளையும் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவை பதிவு செய்தன. இறுதியில் சென்செக்ஸ் 205 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிலைபெற்றது.
 அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை காலையில் அதீதமாக உயர்ந்து தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல முன்னணி பங்குகளில் லாபப் பதிவு வரத் தொடங்கியது. இதன் காரணமாக காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதி பிற்பகலில் இழக்க நேரிட்டது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தைகளில் முதலீடு மேற்கொள்வதால், சந்தை உற்சாகம் பெற்றதாக வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.51 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக நேர முடிவில் ரூ.303.09 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.73கோடி அளவுக்கும், செவ்வாய்க்கிழமை ரூ.2,115.84 கோடி அளவுக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 239.03 புள்ளிகள் கூடுதலுடன் 66,828.96-இல் தொடங்கி அதிகபட்சமாக 67,007.02 வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவை பதிவு செய்தது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தின் போது 66,574.47 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 205.21 புள்ளிகள் கூடுதலுடன் 66,795.14-இல் முடிவடைந்தது.
 16 பங்குகள் விலை வீழ்ச்சி:
 சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 764 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,297 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப்பட்டியலிலும் 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
 நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு:
 தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 76.05 புள்ளிகள் கூடுதலுடன் 19,787.50-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 19,819.45 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னர், 19,690.20 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 37.80 புள்ளிகள் உயர்ந்து 19,749.25-இல் நிறைவடைந்தது. நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிலைத்துள்ளது
 குறிப்பிடத்தகத்கது.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 இன்ஃபோசிஸ் 3.67%
 ஏசியன் பெயின்ட் 1.51%
 ஹெச்சிஎல் டெக் 1.18%
 ரிலையன்ஸ் 0.93%
 ஐசிஐசிஐ வங்கி 066%
 விப்ரோ 0.43%
 சரிவைக் கண்ட பங்குகள்
 எஸ்பிஐ 1.45%
 டைட்டன் 1.38%
 பஜாஜ் ஃபைனான்ஸ் 1.18%
 சன்ஃபார்மா 1.08%
 டாடா ஸ்டீல் 1.02%
 டாடா மோட்டார்ஸ் 0.99%
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT