அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை அபார வளா்ச்சி
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் (அபாா்ட்மென்ட்) விற்பனை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் (அபாா்ட்மென்ட்) விற்பனை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வீடுமனை வா்த்தகத் துறை ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஒட்டுமொத்த விற்பனை 21 சதவீதம் அதிகரித்து 1,26,500-ஆக உள்ளது.
இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அடுக்குமாடி குடியிருப்பு விற்பனையாகும். முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,04,926-ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதங்களில் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 24,987-லிருந்து 2 சதவீதம் சரிந்து 24,482-ஆக உள்ளது. ஜனவரி-ஜூன் காலகட்டத்து மொத்த விற்பனையில் இந்த வகை வீடுகளின் பங்கு 24 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பிரிவில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான விற்பனை 28,933-லிருந்து 4 சதவீதம் அதிகரித்து 30,125-ஆக உள்ளது. மொத்த விற்பனையில் இந்த நடுத்தரப் பிரிவின் பங்கு 28 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதங்களில், ரூ. 75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2022 ஜனவரி-ஜூன் காலகட்டத்தை விட (17,529) 25 சதவீதம் அதிகரித்து 21,848-ஆக உள்ளது. மொத்த விற்பனையில், இந்த விலைப் பிரிவு குடியிருப்புகளின் பங்கு அதிக மாற்றமில்லாமல் 17 சதவீதமாகவே உள்ளது.
ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரையிலான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பிரிவில், கடந்த ஜனவரி - ஜூன் காலாண்டில் விற்பனை 14,484-லிருந்து 67 சதவீதம் அதிகரித்து 24,121-ஆக உள்ளது. மொத்த விற்பனையில் இந்தப் பிரிவு வீடுகளின் பங்கு 14 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரூ.1.5 கோடிக்கும் மேல் விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 21 சதவீதம் அதிகரித்து 26,011-ஆக உள்ளது. மொத்த விற்பனையில் இந்த வகை சொகுசுக் குடியிருப்புகளின் பங்கு 18 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.