கோப்புப்படம் 
வணிகம்

தொடர்ந்து 4-ஆவது நாளாக இழப்பு: 58,000-க்கு கீழே சென்றது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது.

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 338 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் (0.65 சதவீதம்) குறைந்து 17,043.30-இல் நிலைபெற்றது. இதையடுத்து, பங்குச் சந்தை நான்காவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாததால், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்காவின் சிலிகான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் ஆகிய 2 முக்கிய வங்கிகள் மூடப்பட்டது உலகளாவிய நிதிச் சந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பங்குகள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெறுவதும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளன. குறிப்பாக ஐடி, வங்கி, ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி:
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.17 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.256.39 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்களன்று ரூ. 1,546.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் 4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 69.10 புள்ளிகள் குறைவாக 58,168.75-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,490.98 வரை மேலே சென்றது. பின்னர், 57,721.16 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 337.66 புள்ளிகள் (0.58 சதவீதம்) குறைந்து 57,900.19-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 253.13 புள்ளிகள் உயர்ந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன; 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 டைட்டன் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல வாட்ச் உற்பத்தி நிறுவனமான டைட்டன் 0.93 சதவீதம், பார்தி ஏர்டெல் 0.80 சதவீதம் உயர்ந்து ஆதாயப்பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, இண்டஸ்இண்ட் வங்கி, சன்ஃபார்மா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
 எம் அண்ட் எம் கடும் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 2.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ, கோட்டக் வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, என்டிபிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கட்டாயத்தின் அடிப்படையில் முதலமைச்சர் பதவியை ஏற்றேன்! - ஓபிஎஸ்

OPS திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம்! - திருமா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000! - இபிஎஸ் அறிவிப்பு

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

SCROLL FOR NEXT