புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை!
மக்களவைத் தேர்தல் எதிர்பார்ப்பு: இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியது!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கள்கிழமையன்று இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டது.
நிதி சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மின்சார துறைகள் ஏறுமுகத்தில் வர்த்தகமானது. நிஃப்டி 23,338 புள்ளிகளையும், சென்செக்ஸ் 76,738 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்ந்து 76,468 ஆகவும், நிஃப்டி 733 புள்ளிகள் உயர்ந்து 23,263 ஆகவும் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் 2,210 பங்குகள் ஏற்றத்திலும், 1,310 பங்குகள் இறக்கத்திலும், 103 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
சந்தை மூலதனம் பொறுத்தவரை ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டிய ஏழாவது இந்திய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக எஸ்பிஐ ஆனது. அதானி குழும பங்குகள் தொடர்ந்து இரண்டாவது அமர்வாக உயர்ந்ததால் அனைவரின் கவனம் ஈர்த்தது.
மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பங்குகள் 3.5 சதவிகிதமும், அதே வேளையில் ஸ்மால்கேப் பங்குகள் 2 சதவீதமும் உயர்ந்தன. 2024ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதமும், குறைந்த நிதிப் பற்றாக்குறை, முன்கூட்டியே பெய்த பருவமழை மற்றும் மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூலில் 10 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்ததால் இந்திய பங்குச் சந்தையின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிஃப்டி டாப் 50ல் என்டிபிசி, எஸ்பிஐ மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள் 9.3-10.6 சதவிகிதம் உயர்ந்தன. இதற்கிடையில், ஹெச்சிஎல் டெக், எல்டிஐ - மைண்ட்ட்ரீ மற்றும் ஐச்சர் மோட்டார்ஸ் ஆகியவை 0.6 முதல் 1.3 சதவிகிதம் சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் பவர் கிரிட், என்டிபிசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை லாபத்துடன் காட்டப்பட்டது. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தன.
அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய், 28 பைசா உயர்ந்து 83.14 என்ற நிலையில் நிலைபெற்றது.
சர்வதேச கச்சா சந்தையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 80.89 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது.