இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான புதன்கிழமை உற்சாகத்துடன் தொடங்கி புதிய உச்ச அளவைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் பெரிய அளவில் மாற்றமின்றி சிறிதளவு உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், உச்சத்தில் லாபப் பதிவு வந்ததால் எதிர்மறையாகச் சென்றது. இருப்பினும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது. வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், மூலதனப் பொருள்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் மற்றும் எரிசக்தித் துறை பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு : சந்தை மூலதன மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.433.96 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,569.40 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,555.73 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 242.08 புள்ளிகள் கூடுதலுடன் 77,543.22-இல் தொடங்கி 76,954.87 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 77,851.63 77 வரை உயர்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 36.45 புள்ளிகள் கூடுதலுடன் 77,337.59-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,972 பங்குகளில் 1,634 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,235 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 103 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
20 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன், எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், மாருதி, என்டிபிசி, ரிலையன்ஸ் உள்பட 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ உள்பட 10 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி சரிவுடன் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நி நிஃப்டி71.95 புள்ளிகள் கூடுதலுடன் 23,629.85-இல் தொடங்கி 23,412.90 வரை கீழே சென்றது. பின்னர், 23,664.00 வரை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்த நிஃப்டி, இறுதியில் 41.90 புள்ளிகள் (0.18 சதவீதம்) குறைந்து 23,516.00-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 39 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.