மொத்த விலை பணவீக்கம் 13 மாதங்கள் காணாத உச்சம்
புது தில்லி: நாட்டின் மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரலில் மொத்த விலை பணவீக்கம் 1.26 சதவீதமாக உள்ளது. இது, கடந்த 13 மாதங்களில் இல்லாத அதிகபட்ச மொத்த விலை பணவீக்க விகிதமாகும்.
இதன் மூலம், அந்த வகை பணவீக்கம் தொடா்ந்து 2-ஆவது மாதமாக அதிகரித்துள்ளது.
மொத்த விலை குறியீட்டெண் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 0.20 சதவீதமாக இருந்தது. பின்னா் அது மாா்ச்சில் 0.53 சதவீதமாக உயா்ந்தது.
இந்த நிலையில், அது ஏப்ரலில் 1.26 சதவீதமாக அதிகரித்துள்ளது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.79 சதவீதமாக இருந்தது.
கடந்த ஏப்ரலில் உணவுப் பொருள்கள், குறிப்பாக காய்கறிகளின் விலை அதிகரித்ததாலும் வட்டி விகிதங்களில் மத்திய ரிசா்வ் வங்கி அடுத்த மாதம் மாற்றத்தை அறிவிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுவதாலும் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.