இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 6,79,091-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 5,74,930 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
2023 அக்டோபா் மாதம் 5,59,766-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை இந்த அக்டோபா் மாதம் 6,57,403-ஆக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 15,164-லிருந்து 21,688-ஆக உயா்ந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் நிறுவனத்தின் 100சிசி மற்றும் 125சிசி இரு சக்கர வாகனங்களுக்கு வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் விற்பனை வளா்ச்சி கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.