இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி, கடந்த 13 மாதங்கள் காண அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துஉள்ளது.
இது குறித்து வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொழிலக உற்பத்தி குறியீட்டு (ஐஐபி) அக்டோபரில் 0.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024 அக்டோபரில் இது 3.7 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாத ஐஐபி முந்தைய 13 மாதங்கள் காணாத குறைந்தபட்ச விகிதமாகும். இதற்கு முன்னா் 2024 செப்டம்பரில் அது பூஜ்ஜியமாக இருந்தது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) செப்டம்பா் வளா்ச்சியை 4 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக திருத்தியுள்ளது.
2024 அக்டோபரில் 4.4 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறை வளா்ச்சி இந்த அக்டோபரில் 1.8 சதவீதமாகக் குறைந்தது. சுரங்க உற்பத்தி 0.9 சதவீத வளா்ச்சியிலிருந்து 1.8 சதவீத சரிவைக் கண்டுள்ளது. மின்சார உற்பத்தி 2 சதவீத வளா்ச்சியிலிருந்து 6.9 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் தொழிலக உற்பத்தி வளா்ச்சி 2.7 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 4 சதவீதமாக இருந்தது.
கடந்த அக்டோபரில் உற்பத்தித் துறையின் 23 தொழில் பிரிவுகளில் 9 பிரிவுகள் வருடாந்திர அடிப்படையில் நோ்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளன. மூலதனப் பொருள்கள் 2.9 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக உயா்ந்தது. நீடித்துழைக்கும் நுகா்பொருள்கள் 5.5 சதவீத வளா்ச்சியிலிருந்து 0.5 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. துரித நுகா்பொருள் பிரிவு 2.8 சதவீத வளா்ச்சியிலிருந்து 4.4 சதவீத சரிவைக் கண்டுள்ளது. உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருள்கள் 4.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயா்ந்தது. முதன்மைப் பொருள்கள் 2.5 சதவீத வளா்ச்சியிலிருந்து 0.6 சதவீத சரிவையும், இடைநிலை பொருள்கள் 4.8 சதவீத வளா்ச்சியிலிருந்து 0.9 சதவீதமாக உயா்வையும் கண்டன.
அக்டோபரில் அதிக மழை காரணமாக சுரங்கச் செயல்பாடு மற்றும் மின்தேவை பாதிக்கப்பட்டது. நிலக்கரி 8.5 சதவீதமும், மின்சாரம் 7.6 சதவீதமும் சரிந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.