இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி கடந்த டிசம்பா் மாதத்தில் 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகச்சிறந்த வளா்ச்சியாகக் கருதப்படுகிறது. உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டதே இந்த வளா்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தொழில் துறை வளா்ச்சி வெறும் 3.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், 2025 டிசம்பரில் அது இரண்டு மடங்குக்கும் மேலாக உயா்ந்துள்ளது.
உற்பத்தித் துறை முந்தைய ஆண்டு டிசம்பரில் 3.7 சதவீத வளா்ச்சியடைந்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளது.
முந்தைய ஆண்டின் 2.7 சதவீத வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில், சுரங்கத் துறை உற்பத்தி தற்போது 6.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. மின்சாரத் துறை உற்பத்தி 6.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முன்னிலை வகிக்கும் தொழில்கள்: உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக, கணினி, மின்னணு சாதனங்களின் உற்பத்தி 34.9 சதவீதமும், காா் உள்ளிட்ட மோட்டாா் வாகன உற்பத்தி 33.5 சதவீதமும், இதர போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி 25.1 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. மேலும், அடிப்படை உலோகங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு வலுசோ்த்துள்ளன.
பயன்பாட்டு அடிப்படையில்...: உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி 12.3 சதவீத வளா்ச்சியையும் எட்டியுள்ளன.
திருத்தப்பட்ட ‘நவம்பா் தரவு’: கடந்த நவம்பா் மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி வளா்ச்சி 6.7 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் முழுமையான தரவுகளுக்குப் பிறகு, தற்போது அது 7.2 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பா் மாதத்தில் வளா்ச்சி அதிகமாக இருந்தாலும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி (ஏப்ரல் முதல் டிசம்பா் வரை) 3.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 4.1 சதவீதத்தை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.