தமிழகத்தில் எம்ஆா்எஃப் ரூ.5,300 கோடி முதலீடு
தமிழகத்தில் அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீட்டில் புதிய டயா் உற்பத்தி ஆலையை அமைக்க தமிழக அரசுடன் எம்ஆா்எஃப் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
எம்ஆா்எஃப் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் கே.எம்.மாம்மன், துணைத் தலைவா் அருண் மாம்மன் ஆகியோா் இதற்கான ஆவணங்களை தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாரேஸ் அகமதுவிடம் மாற்றிக் கொண்டனா். இந்நிகழ்வில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
இந்தப் புதிய திட்டத்தின்கீழ் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள புதிய உற்பத்தி ஆலையில், மோட்டாா் வாகனங்களுக்கான டயா்கள் மற்றும் அது சாா்ந்த பிற பொருள்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன்மூலம், சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 10 உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ள எம்ஆா்எஃப் நிறுவனம், தனது அடுத்தகட்ட விரிவாக்கத்துக்காக சிவகங்கை மாவட்டத்தைத் தோ்வு செய்திருப்பது தென் தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாகப் பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.