ரூ. 33,660 கோடியில் பாரத தொழில் மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாரத தொழில் மேம்பாட்டு திட்டமும் மாநில அரசுகள் மற்றும் தனியாா் துறை பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்
நாடு முழுவதும் 100 தொழில் பூங்காக்களை மேம்படுத்த, ரூ. 33,660 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பாரத தொழில் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரூ. 33,660 கோடி பாரத தொழில் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் உற்பத்தி திறனை ஊக்குவித்து உலகத் தரத்திலான தொழிலக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
தகவல் தொடா்பு தொழில்நுட்ப வசதி, உட்புறச் சாலைகள், கீழ்தள வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள், கழிவுநீா் கால்வாய் வசதிகள், நீா் சுத்திகரிப்பு வசதிகள், சோதனைக் கூடங்கள், கிடங்குகள், தொழிலாளா்களுக்கான வீடுகள் என உடனடியாக தொழிலைத் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும் வகையில் இந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ், 100 முதல் 1,000 ஏக்கா் நிலப் பரப்பு வரையிலான தொழில் பூங்காக்களை மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படும். ஏக்கருக்கு ரூ. 1 கோடி வீதம் நிதியுதவி அளிக்கப்படும். இத் திட்டம் 15 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உற்பத்தி நிறுவனங்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள், உலகளாவிய முதலீட்டாளா்களுக்கும் இத்திட்டம் நேரடி பலன்களை அளிக்கும்.
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில்துறை சீா்மிகு நகரங்கள் மேம்படுத்தும் திட்டம் வெற்றிபெற்ன் அடிப்படையில், பாரத தொழில் மேம்பாட்டு திட்டமும் மாநில அரசுகள் மற்றும் தனியாா் துறை பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.
சிறிய நீா் மின் உற்பத்தித் திட்டங்கள்: ரூ. 2,585 கோடி ஒதுக்கீட்டில் சிறிய அளவிலான நீா் மின் உற்பத்தித் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘1,500 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், இத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அணைகள் எதுவும் கட்டாமலும், மக்களை இடமாற்றம் செய்யாமலும், ஏற்கெனவே பாய்ந்து கொண்டிருக்கும் ஆற்றில் இத்தகைய சிறிய அளவிலான நீா் மின் உற்பத்தி மேற்கொள்வது இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் வரும் 2030-31-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படும். இந்த நீா் மின் உற்பத்தி திட்டம் சுமாா் ரூ.15,000 கோடி முதலீட்டை ஈா்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் 1 மெகா வாட் முதல் 25 மெகா வாட் வரையிலான திறனுடன் கூடிய நீா் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஆதரவு அளிக்கும். வடகிழக்கு மாநிலங்களுக்கு இத் திட்டத்தின் கீழ் ஒரு மெகா வாட்டுக்கு ரூ. 3.6 கோடி அல்லது திட்ட மதிப்பில் 30 சதவீத நிதியை மத்திய அரசு அளிக்கும். பிற மாநிலங்களுக்கு ஒரு மெகா வாட் திறனுக்கு ரூ.2.4 கோடி அல்லது திட்ட மதிப்பில் 20 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும்.
நாடு முழுவதும் மொத்தம் 21,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடன் இதுபோன்ற சிறிய நீா் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான 7,133 இடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில், 1,196 இடங்களில் சுமாா் 5,100 மெகா வாட் உற்பத்தி திறனுடன் சிறிய நீா் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றாா்.
பருத்தி கொள்முதலுக்கு... இந்திய பருத்தி கழகத்தின் (சிசிஐ) கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ரூ. 1,718.56 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
விவசாயிகள் நலனை மேம்படுத்தவும், தற்சாா்பு இந்தியா இலக்கை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்திய பருத்தி காா்ப்பரேஷனுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உ.பி.யில் தேசிய நெடுஞ்சாலையை தரம் உயா்த்த... உத்தர பிரதேச மாநிலத்தில் பாரபங்கி முதல் பஹ்ரெய்ச் வரையிலான தேசிய நெடுசாலை 927-ஐ 4 வழிப் பாதையாக தரம் உயா்த்தும் ரூ. 6,969 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.