முகப்பு
இந்தியா

மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு ரூ.28,840 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிராந்திய விமானப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

Updated On : 25 மார்ச், 2026 at 8:48 PM
அஸ்வினி வைஷ்ணவ்.
பகிர்:

பிராந்திய விமானப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

ரூ.28,840 கோடி ஒதுக்கீட்டுடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2035-36 வரை) செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், விமான நிலையங்கள் மேம்பாடு, செயல்பாடு-பராமரிப்புக்கான ஆதரவு, நவீன ஹெலிபேடுகள் கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு விமான கொள்முதலுக்கான ஆதரவை உள்ளடக்கியதாகும்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.

அவா் கூறுகையில், ‘மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டத்தின்கீழ், இதுவரை பயன்பாட்டில் இல்லாத ஓடுதளங்களைக் கொண்ட100 விமான நிலையங்கள் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும். இந்தப் பணிகளுக்காக, அடுத்த 8 ஆண்டுகளில் ரூ.12,159 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேபோல், குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதால், விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கான மானிய நிதிக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.10,043 கோடி ஒதுக்கப்படும்’ என்றாா்.

மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டத்தில் பிற பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அடுத்த 8 ஆண்டுகளில் தலா ரூ.15 கோடி செலவில் 200 நவீன ஹெலிபேடுகள் கட்டமைக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு சுமாா் ரூ.3,661 கோடியாகும்.

முன்னுரிமை - லட்சிய மாவட்டங்களில் கடைசி தொலைவு இணைப்பு மற்றும் அவசரகால செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நவீவன ஹெலிபேடுகள் கட்டமைக்கப்பட உள்ளன. 441 சிறிய விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கு ஆதரவளிக்க அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.2,577 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2016-இல் தொடங்கப்பட்ட உடான் திட்டம், இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போதைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 95 விமான நிலையங்கள், பிரத்யேக ஹெலிகாப்டா் தளங்கள் மற்றும் நீா் பரப்பில் செயல்படும் விமான தளங்களில் இருந்து 663 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் மொத்தம் 16 கோடி பயணிகளுடன் 3.41 லட்சம் விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐவிஎஃப்ஆா்டி திட்டம் நீட்டிப்பு: நாட்டின் குடியேற்ற நடைமுறையை நவீனமாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் நோக்கில், குடியேற்றம்-நுழைவு இசைவு (விசா)-வெளிநாட்டினா் பதிவு மற்றும் கண்காணிப்புத் திட்டத்தை (ஐவிஎஃப்ஆா்டி) அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், இதற்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.