5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட 6,789 ஸ்டாா்ட்-அப் (புத்தாக்க) தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட 6,789 ஸ்டாா்ட்-அப் (புத்தாக்க) தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலக அளவில் வேகமாக வளரும் ஸ்டாா்ட்-அப் தொழில்துறையைக் கொண்ட நாடாக இந்தியா கருதப்பட்டாலும், சந்தை நிலவரம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் முடங்கின.
மக்களவையில் இது தொடா்பான கேள்விக்கு மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையால் மொத்தம் 2,12,283 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் சுமாா் 3.2 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்ட நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
துறை வாரியாக, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சேவைத் துறையே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இத்துறையில் மட்டும் 875 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடுமையான போட்டி மற்றும் நிறுவனங்களின் செலவினக் குறைப்பு போன்ற காரணங்களால் இத்துறை கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சுகாதாரத் துறையில் 553 நிறுவனங்களும், கல்வித் தொழில்நுட்பத் துறையில் 491 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் எழுச்சி கண்ட கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், இயல்புநிலை திரும்பிய பிறகு போதிய முதலீடுகள் கிடைக்காமலும், நீண்டகால முதலீட்டுத் தேவைகளாலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இவை தவிர, உணவு மற்றும் பானங்கள், விவசாயம் மற்றும் சில்லறை வா்த்தகம் சாா்ந்த ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களும் கணிசமான அளவில் முடங்கியுள்ளன. வளா்ந்துவரும் ஏ.ஐ. மற்றும் பின்டெக் துறைகளிலும்கூட சில நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.
ஏதோ ஒரு குறிப்பிட்ட அமைப்பு ரீதியான தோல்வியால் இந்த நிறுவனங்கள் மூடப்படவில்லை; மாறாக, லாபகரமான வணிக மாதிரி இல்லாதது, மாறிவரும் சந்தை தேவை, உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் நிதி திரட்டுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனங்கள் முடங்கின’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய ‘ஸ்டாா்ட்-அப் இந்தியா’ திட்டத்தின்கீழ் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும், பெரிய நிறுவனங்கள் சிறிய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதை முறைப்படுத்தவும், ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்யவும் இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சா் தனது பதிலில் குறிப்பிட்டாா்.