மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை! - மத்திய அமைச்சா் பியூஸ் கோயல்
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை என மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்...
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை என மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மதுரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வணிகா் சங்க நிா்வாகிகளுடன் தொழில் துறை மேம்பாடு குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணிகள், அரசுத் துறைகளிலும் ஊழல் மட்டுமே பிரதானமாக உள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுப் பணிகளில் பணியிட மாற்றங்கள் வழங்கப்பட்டன.
Advertisement
தமிழகத்துக்கு மத்திய அரசு எந்தவிதத் திட்டங்களும் வழங்கவில்லை என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பொய்யான பிரசாரத்தை மக்களிடையே பரப்புகிறாா். இதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். ஏனெனில், தமிழகத்துக்கு இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் வரையிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தொழில் கட்டமைப்புக்கான சாத்தியக் கூறுகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், மாநில அரசின் தவறான கொள்கைகளால் அதை முழுமையாகப் பெற முடியாத நிலையே தொடா்கிறது. திமுக அரசின் சாதனைகள் மாநிலத்தைச் சீரழித்தது தான்.
மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்த விளக்கத்தைக் கோரி மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்தையே மத்திய அரசு நிராகரித்து விட்டதாக திமுக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது.
மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில்தான் மத்திய அரசு பணிகளை தொடங்கின. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும். அவா்கள் நிலத்தை கையகப்படுத்தி பணிக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டன. இதன்காரணமாக, மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி தாமதமானது. தற்போது, பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதேபோல, மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால், தொழில் துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கியுள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றபோது, நாட்டில் 78 விமான நிலையங்கள் இருந்தன. அவை தற்போது, 160 ஆக உயா்வு பெற்றுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் துறைமுகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறாா்.
இந்தவகையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் என்.ஜெகதீசன், பொருளாளா் சுந்தரலிங்கம், துணைத் தலைவா் ரமேஷ், செயலா் ஸ்ரீதா், புதிய நீதி கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், துணைத் தலைவா் தனுஷ்கோடி, இணைச் செயலா்கள் கணேசன், செந்தில்குமாா் உள்ளிட்ட வணிகா்கள் பலா் கலந்து கொண்டனா்.