பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10,000 கோடி திரட்டியுள்ளது.
இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆண்டுக்கு 7.23 சதவீத வட்டி விகிதத்தில் நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்டப்பட்டுள்ளது.
இந்தக் கடன் பத்திரங்களின் அடிப்பபடை மதிப்பு ரூ.5,000 கோடியாகவும், கூடுதல் விருப்ப மதிப்பு ரூ.5,000 கோடியாகவும் இருந்தது.
ஆா்பிஐ வழிகாட்டுதல்களின்படி உள்கட்டமைப்பு துணைத் துறைகள் மற்றும் மலிவு வீட்டு திட்டங்களுக்கான நீண்டகால திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதியளிக்க இந்த மூலதனம் பயன்படுத்தப்படும். இந்த கடன் பத்திர வெளியீட்டால் திரட்டப்பட்ட நிதி எந்த ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்குமானது இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.