இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிஃப்டி பட்டியலில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 52 வாரங்களில், அதாவது கடந்த ஓராட்டில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.
2024 ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 1179ஆக இருந்தது. ஆனால் தற்போது 44% சரிந்து ரூ. 662 ஆக உள்ளது. (பிப். 25 நிலவரப்படி)
நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் விற்பனைக்கான அழுத்தத்தில் உள்ள பங்குகளில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் முதன்மையான பட்டியலில் உள்ளன.
டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிய 3 காரணங்கள்!
கிளை நிறுவன விற்பனை மந்தம்
டாடாவின் கிளை நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வருவாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாயில் பெரும்பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் விற்பனை சரிந்தது முதன்மை காரணமாகப் பார்க்கப்படுகிறது.
டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் 22% சரிந்து ரூ. 5,451 கோடியாக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 7,025 கோடியாக இருந்தது.
போட்டி அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாகப் பார்க்கப்படும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது மற்றொரு காரணமாகக் கூறலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் டாடாவை முந்தியது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் டாடாவை விஞ்சி 3வது இடத்தைப் பிடித்தது மஹிந்திரா.
2025 ஜனவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 50,659 எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்தது. இது முந்தைய ஆண்டை விட 18% அதிகமாகும்.
இதேவேளையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 48,076 கார்களே விற்பனையாகின. இது கடந்த ஆண்டை விட 10% குறைவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 53,633 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அந்த அளவுக்கான விற்பனை டாடாவில் இம்முறை இல்லை.
டெஸ்லா வருகை
இந்திய சந்தையில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் வருகைபுரிந்துள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், மின்னணு வாகனங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது டெஸ்லா வருகைக்கு தீனி போடுவதைப்போன்று மாறியதால், டாடா மோட்டார்ஸுக்கான போட்டி மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் டாடா மோட்டார்ஸின் முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.