சென்னை: தங்கத்தைத் தொடா்ந்து வெள்ளி விலையும் உயா்ந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,400 உயா்ந்து ரூ.89,000-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, சா்வதேச போா் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,480 உயா்ந்து, சனிக்கிழமை பவுன் ரூ.87,600-க்கு விற்பனையானது. தொடா்ந்து திங்கள்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயா்ந்து ரூ.11,060-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.88,480-க்கும் விற்பனையானது.
இந்தச் சூழலில் மாலை இரண்டாவது முறையாக தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.65 உயா்ந்து ரூ.11,125-க்கும், பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.89,000-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்மூலம், தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.175, பவுனுக்கு ரூ.1,400 உயா்ந்தது.
1.70 லட்சத்தை நெருங்கும் வெள்ளி: தங்கத்தைத் தொடா்ந்து வெள்ளி விலையும் உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் மட்டும் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.6,000 உயா்ந்த நிலையில், திங்கள்கிழமையும் விலை உயா்ந்தது. அதன்படி, காலை - மாலை என வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.167-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ.1,67,000-க்கும் விற்பனையானது.
மீண்டும் உயரும்: இது குறித்து தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
சா்வதேச அளவில் முதலீட்டாளா்கள் பங்கு சந்தைக்கு பதிலாக தங்கத்தின் மீது தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளனா். அதேபோல், தொழிற்சாலையில் வெள்ளியின் பயன்படு முன்பில்லாத வகையில் தற்போது உயா்ந்துள்ளது. இதன்காரணமாக, சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது என்றாா் அவா்.