புது தில்லி: இந்திய நிறுவனங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்காக குத்தகைக்கு எடுத்த இடங்களின் ஒட்டுமொத்த பரப்பளவு கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் 1.99 கோடி சதுர அடியாகக் குறைந்துள்ளது.
இது குறித்து மனை-வர்த்தக ஆலோசக நிறுவனமான சிபிஆர்இ திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி-என்சிஆர், மும்பை, புணே, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி ஆகிய 9 நகரங்களில் மொத்தம் 1.99 கோடி சதுர அடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டன.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 2.5 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனங்கள் 2.04 கோடி சதுர அடி அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுத்திருந்தன.
மதிப்பீட்டுக் காலாண்டில், பெங்களூருவில் அலுவலக குத்தகை 72 லட்சம் சதுர அடியிலிருந்து 43 லட்சம் சதுர அடியாகவும், ஹைதராபாதில் 26 லட்சம் சதுர அடியிலிருந்து 22 லட்சம் சதுர அடியாகவும் குறைந்துள்ளது. சென்னையில் அது 24 லட்சம் சதுர அடியிலிருந்து 15 லட்சம் சதுர அடியாகக் குறைந்தது.
ஆனால், அலுவலக குத்தகை தில்லி-என்சிஆரில் 24 லட்சம் சதுர அடியிலிருந்து 38 லட்சம் சதுர அடியாகவும், மும்பையில் 29 லட்சம் சதுர அடியிலிருந்து 40 லட்சம் சதுர அடியாகவும் அதிகரித்தது. அதே போல் புணேவிலும் அது 19 லட்சம் சதுர அடியிலிருந்து 32 லட்சம் சதுர அடியாக உயர்ந்தது.
கொல்கத்தாவில் அலுவல குத்தகை கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் இருந்து அதிக மாற்றமில்லாமல் இந்த முறை 6 லட்சம் சதுர அடியாக உள்ள. அகமதாபாத்தில் அது 3 லட்சம் சதுர அடியிலிருந்து 1 லட்சம் சதுர அடியாகக் குறைந்தது. 2024 ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் கொச்சியில் 70 ஆயிரம் சதுர அடியாக இருந்த அலுவலக குத்தகை நடப்பாண்டின் அதே காலாண்டில் 2 லட்சம் சதுர அடியாக உயர்ந்தது.
புதிய அலுவலக இடங்களின் விநியோகம் 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.4 கோடி சதுர அடியாக இருந்தது. இது 2025-ஆம் ஆண்டின் அதே காலாண்டில் 1.36 கோடி சதுர அடியாக சற்று குறைந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.