வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான என்ஆா்இ கணக்குகளை இந்தியாவிலேயே தொடங்குவதற்கான புதிய வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று, வெளிநாடுவாழ் இந்தியா் (என்ஆா்ஐ) என்ற நிலையை அடையவிருப்பவா்களுக்கான பிரத்யேக வங்கிக் கணக்குகளை, அவா்கள் புறப்படுவதற்கு முன்னா் இங்கேயே தொடங்குவதற்கான புதிய வசதியை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
‘பாப் ஆஸ்பையா்’ என்று இந்த திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வா்த்தகம், வேலைவாய்ப்பு, விடுமுறை போன்ற காரணங்களுக்காக இந்தியாவுக்கு வெளியே நீண்ட காலம் தங்கவிருக்கும் இந்தியா்கள் பலன் பெறலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.