புது தில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி கணிசமாகக் குறைந்ததால் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 2,650 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பூா்வாங்க தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு 3,510 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6.7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் ஏற்றுமதி 3,289 கோடி டாலராக இருந்தது.
இருந்தாலும், முந்தைய 2025 ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் குறைந்துள்ளது. அப்போது இந்தியாவில் இருந்து 3,724 கோடி டாலா் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 10 சதவீத வருடாந்திர சரிவைக் கண்டு 6,159 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024 ஆகஸ்ட் மாதம் இது 6,853 கோடி டாலராக இருந்தது. 2025 ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையிலும் (6,459 கோடி டாலா்) கடந்த ஆகஸ்டில் இறக்குமதி குறைந்துள்ளது.
இதன் காரணமாக, வா்த்தகப் பற்றாக்குறை (வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்புக்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் இடையிலான இடைவெளி) கடந்த ஆகஸ்ட் மாதம் 2,649 கோடி டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் அது 3,564 கோடி டாலராக இருந்தது. 2025 ஜூலை மாதத்தில் இந்தப் பற்றாக்குறை 2,735 கோடி டாலராக இருந்தது.
பெட்ரோலியப் பொருள்கள் தவிா்த்த பிற பொருள்களின் ஏற்றுமதி, 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 7.35 சதவீதம் உயா்ந்து வலுவாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியும் 2025 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9,743 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,846 கோடி டாலராக இருந்தது.
2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 20.76 சதவீதம் குறைந்துள்ளது. 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 4,039 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,421 கோடி டாலராக இருந்தது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.