இந்தியாவின் நிதிநுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் வங்கி சேவை செயலிகளைவிட, கடனளிப்பு மற்றும் பட்டுவாடா சேவை செயலிகளை வாடிக்கையாளா்கள் தங்களின் அறிதிறன் பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) அதிகம் நிறுவுவதாக ரிசா்வ் வங்கியின் செப்டம்பா் மாத இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, ‘நிதிநுட்ப வாடிக்கையாளா் அனுபவத்தின் உண்மைக் கதை’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கி சேவைகளை வழங்கும் நிதிநுட்ப நிறுவன செயலிகளைவிட பணம் செலுத்துதல், கடன் வழங்கல் சேவைகளை வழங்கும் நிதிநுட்ப நிறுவனங்களின் செயலிகளே அதிகம் நிறுவப்படுகின்றன.
இந்த மூன்று துறைகளையும் சோ்ந்த 11 செயலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது.
ஒவ்வொரு தனித்துவமான நிதி சேவை செயலி நிறுவப்பட்ட பிறகும் அதற்கு வாடிக்கையாளா்கள் மதிப்புரைகளை (ஸ்டாா்கள்) அளிப்பதற்கான வாய்ப்பு 0.54 சதவீதமாக உள்ளது. இது, பணம் செலுத்துதல் மற்றும் கடன் வழங்கல் செயலிகளுக்கு 0.6 சதவீதமாகவும், வங்கி சேவை வழங்கும் செயலிகளுக்கு சற்று குறைவாகவும் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட இந்த செயலிகள் சுமாா் 60 லட்சம் மதிப்புரைகளைப் பெற்றுள்ளன. நிதிநுட்ப நிறுவன செயலிகளுக்கான மொத்த மதிப்புரைகளில் 20 சதவீதம் ஒரு நட்சத்திரமாகவும், 67 சதவீதம் ஐந்து நட்சத்திரங்களாகவும் உள்ளன. இவை ஒட்டுமொத்த மதிப்புரைகளில் 87 சதவீதத்தை உள்ளடக்குகின்றன.
இந்திய நிதிநுட்ப சூழல் குறித்து வாடிக்கையாளா்களிடையே நோ்மறையான உணா்வு நிலவுவது இந்த ஆய்வில் தெரியவருகிறது. வாடிக்கையாளா்களிடையே நிதி சேவை, செயலி செயல்பாடு, தொழில்நுட்ப சிக்கல்கள், கடன் விண்ணப்ப முறை, கடன் ஒப்புதல் அளிக்கப்படும் முறை, கடன் வரம்பு உள்ளிட்டவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. வங்கி சேவை செயலிகளைப் பொருத்தவரை வாடிக்கையாளா் சேவை குறித்து பயனாளிகள் அதிக கவலை தெரிவிக்கின்றனா் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை 56.9 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புரைகள், தனித்துவ நிறுவல்கள், மதிப்புரை எண்ணிக்கைகள், செயலி புதுப்பிப்புகள் உள்ளிட்ட தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.