தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ஒரு சிறு தகவல் கூட கசியாமல் திடீரென இன்று மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று காலை 7.45 மணிக்கு தமிழக மக்களிடையே உரையாடியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம் என்றும், திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வென்று 2.0- ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று தெரிவித்துள்ளார்.
முதலில் மகளிர் உரிமைத் தொகை பெறத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாகத் தெரிவானவர்களுக்கு மாதந்தோறும் 12ஆம் தேதியும் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வந்தது.
ஆனால், பிப்.12ஆம் தேதி வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படவில்லை. இதனால் பெண்களுக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பம் 24 மணி நேரத்துக்குள் தீர்ந்துவிட்டது. காரணம், இன்று காலை 5 மணி முதலே 1.31 கோடி மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது என்ற தகவல் செல்போன்களுக்கு வந்து சேர்ந்தது. இதைப் பார்த்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இதனால் வங்கிகளிலும் மகளிர் கூட்டம் அலைமோதுகிறது.
இன்று, ஒட்டுமொத்தமாக ரூ.5,000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது, முதல்வர் ஸ்டாலின், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை உறுதி செய்யும் வகையிலும், தொடர்ந்து இந்த பணம் அடுத்த ஆட்சியிலும் கிடைக்கும் என்பதற்கு உறுதியளிக்கும் வகையிலும் இருப்பதாக பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல், இந்த மகளிர் உரிமைத் தொகையை, தேர்தலைக் காரணம் காட்டி நிறுத்த முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார். எனவே, தங்களுடைய திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் பெண்கள், எந்த நடவடிக்கையாலும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே செலுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது பெண்களுக்கு இடையே பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாம்.
இன்று இந்த தொகை கொடுத்திருப்பதன் மூலம், இது வெறும் அரசு திட்டம் அல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு அளித்திருக்கும் உறுதிமொழி என்பதை மறைமுகமாக அல்ல நேரடியாகவே சொல்லியிருக்கிறார். அதுவும் முன்கூட்டிய எந்த அறிவிப்பும் இல்லாமல், பெண்கள் இன்று காலை கண் விழிக்கும் முன்பே அவர்கள் வங்கிக் கணக்கில் காசு வந்துவிட்டது. நாள்தோறும் செலவுக்கு பணம் கேட்டு காத்திருந்த பல பெண்களிடம் வீட்டார் கடன் கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, முதல் முறையாக தங்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்படும் ஒரு பெருமித உணர்வு எப்படி இருக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த ரூ.5,000.
இது தேர்தலுக்காக கொடுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினாலும், இந்த 5 ஆயிரம் ரூபாய் என்ன செய்யும்? என்று சிலர் கேட்கலாம்.
நலத் திட்டங்களை எல்லாம் தாண்டி இதில் ஒரு அரசியல் கணக்கும் இருக்கிறது என்றுதான் தேர்தல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே, தமிழகத்தில் பல பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். அதாவது 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 207 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம். 27 தொகுதிகளில்தான் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். 39 மக்களவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளைத் தவிர மற்ற 36 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு நிலை இப்படியில்லை. 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. அதாவது 3,237 பேர் அதிகமாக இருந்தனர். அது படிப்படியாக உயர்ந்து ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போதும் கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. இப்போது அண்மையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாக உள்ளது. இதில் 2.77 கோடி பெண்கள் என்றும், 2.66 கோடி பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
அதுபோல, 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், ஆண் வாக்காளர்களை விடவும் 5.7 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்திருந்தனர். மொத்தமாக பதிவான 4.57 கோடி வாக்குகளில் 2.31 கோடி பெண்களும், 2.26 கோடி ஆண்களும் அடங்குவர். இந்த எண்ணிக்கையும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்கிறார்கள் திமுகவினர்.
எனவே, இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, தேர்தலில் நிச்சயம் ஆட்டத்தை மாற்றும் என்றே கூறப்படுகிறது. பெண்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் எத்தனை பெண் வாக்காளர்களுக்கு இந்த திட்டத்தில் பணம் வருகிறது போன்றவை எல்லாம் அடுத்த கூட்டல் கழித்தலுக்கு உரியது என்றாலும், மிகவும் கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில்கூட, இந்த கணிசமான பெண்களின் வாக்குகள் நிச்சயம் வெற்றிக் கணக்கை மாற்றலாம் என்றே கணிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தை ஆளும் திமுக, நேரடியாக ரூ.5,000-ஐ கொடுத்திருக்கிறது. இது வாக்குறுதிகளை எல்லாம் விட பெரியது. அதிலும், இந்த தொகை, ஏழை, எளிய குடும்பங்களுக்கு பெரிய தொகை. இது, தேர்தல் பிரசாரங்கள், வாக்குறுதிகளை எல்லாம் விஞ்சும்.
தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதாலும், இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உதவித் தொகையால் அவர்கள் வீட்டின் குடும்பத் தலைவர்களையும் திமுகவுக்கே வாக்களிக்க பெண்களால் வலியுறுத்த முடியும் என்பதாலும் நிச்சயம் ஆட்டத்தை மாற்றும் சக்தியாக ஐந்து ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.