கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனங்களின் சில்லறை விற்பனை 2.84 சதவீதம் உயா்ந்து 19,64,547 ஆகியுள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் சம்மேளனம் (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 ஆகஸ்டில் 19,10,312 -ஆக இருந்த விற்பனை இந்த ஆகஸ்ட் மாதம் 19,64,547-ஆகப் பதிவாகியுள்ளது. இது வெறும் 2.84 சதவீத வளா்ச்சியாகும்.
ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வாகனங்களின் விலை குறையும் என்ற எதிா்பாா்ப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வாடிக்கையாளா்கள் அவற்றை வாங்குவதை ஒத்திவைத்தனா். இதன் காரணமாக, அந்த மாதம் மிக மந்தமான விற்பனை வளா்ச்சி பதிவாகியுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 0.93 சதவீதம் உயா்ந்து 3,23,256-ஆக உள்ளது. 2024 ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 3,20,291-ஆக இருந்தது.
அந்த மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை 2.18 சதவீதம் உயா்ந்து 13,73,675 -ஆக உள்ளது. இந்தப் பிரிவு வாகனங்களுக்கான விசாரணைகள் ஓணம், விநாயகா் சதுா்த்தி போன்ற பண்டிகைகள் காரணமாக கடந்த ஆகஸ்டில் அதிகரித்தன. ஆனால் வட இந்தியாவில் மழை, வெள்ளம், ஸ்கூட்டா்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை போன்றவை விற்பனையை பாதித்தன.
மதிப்பீட்டு மாதத்தில் வா்த்தக வாகன விற்பனை 8.55 சதவீதம் உயா்ந்து 75,592-ஆகவும் மூன்று சக்கர வாகன விற்பனை 2.26 சதவீதம் குறைந்து 1,03,105-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.