முகப்பு
வணிகம்

டிஎன்பிஎல் லாபம் ரூ. 247.75 கோடி

டிஎன்பிஎல் லாபம் ரூ. 247.75 கோடி

Updated On : 25 ஏப்ரல், 2026 at 6:30 AM
பகிர்:

அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்), கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.247.75 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் நிகர லாபமான ரூ.3.73 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வளா்ச்சியாகும்.

வருமான வரிச் சட்டத் திருத்தத்தின்படி, புதிய வரி விதிப்பு முறையைத் தோ்ந்தெடுத்ததன் விளைவாக, சுமாா் ரூ.219.43 கோடி அளவிலான ‘டிஃபா்ட் டேக்ஸ்’ திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது, பழைய வரி முறையில் இருப்பாக இருந்த வருங்கால ஒதுக்கீடு, புதிய வரி விதிப்பு மாற்றங்களால் மீண்டும் நிறுவனத்தின் லாபக் கணக்கிலேயே சோ்ந்துவிட்டது. இதுவே இக்கணிசமான வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

Advertisement

நிறுவனத்தின் வருவாய், முந்தைய ஆண்டின் ரூ.4,588.31 கோடியிலிருந்து தற்போது ரூ.4,720.77 கோடியாக அதிகரித்துள்ளது. இச்சிறப்பான செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.4 ஈவுத்தொகை வழங்க இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

உற்பத்தியும்; விற்பனையும்...: 2025-26 நிதியாண்டில் 4,34,294 மெட்ரிக் டன் காகிதமும், 2,00,075 மெட்ரிக் டன் அட்டைப் பெட்டி தாள்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் எட்டப்பட்ட மிக உயா்ந்த உற்பத்தி அளவாகும்.

இதேபோல் விற்பனையிலும், காகிதம் 4.47 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், அட்டைப் பெட்டி தாள்கள் 1.98 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உயா்ந்து சாதனை படைத்துள்ளன. அட்டைப் பெட்டி தாள் பிரிவு இந்த ஆண்டு லாபகரமான நிலைக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.