மும்பை: பங்குச் சந்தைகள் நேற்று உயர்வுடன் வர்க்கமான நிலையில் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஏற்ற-இறக்கத்துடன் வர்த்தகமானது. முடிவில் சற்று உயர்ந்து முடிவடைந்தன.
தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணிப் பங்குகளில் ஏற்பட்ட கடும் சரிவு, சந்தைகளின் உயர்வைத் தடுத்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சற்றே உயர்ந்தன.
வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் அதிகபட்சமாக 83,947.53 புள்ளிகளுடனும் பிறகு குறைந்தபட்சமாக 83,119.95 புள்ளிகளையும் தொட்டு, 827.58 புள்ளிகள் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 78.56 புள்ளிகள் உயர்ந்து 83,817.69 புள்ளிகளாகவும், நிஃப்டி 48.45 புள்ளிகள் உயர்ந்து 25,776 புள்ளிகளாக நிலைப்பெற்றது.
சென்செக்ஸில் எடர்னல், டிரெண்ட், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிகபட்சமாக 7 சதவீதம் வரை சரிந்து முடிவடைந்தன.
எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் பொருட்கள், உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் வெகுவாக உயர்ந்த நிலையில், தொழில்நுட்பப் பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பக் குறியீடு 5.49% சரிந்து 35,109.51 புள்ளிகளாக நிலைபெற்றது.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.5,236.28 கோடி மதிப்புள்ள பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,014.24 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.36% உயர்ந்து 67.57 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.