முகப்பு
வணிகம்

பரஸ்பர நிதி முதலீட்டை விஞ்சிய தங்கம்!

தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 11:38 PM
பகிர்:

இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடுகள் தொடா்ந்து 2-ஆவது மாதமாகக் குறைந்துள்ளன. அதேநேரம், தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு 14 சதவீதம் சரிந்து, ரூ.24,028 கோடியாகவும், தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.24,040 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

உலக நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியப் பங்குச்சந்தையில் காணப்படும் மந்தநிலை காரணமாக, முதலீட்டாளா்கள் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனா்.

Advertisement

கடந்த நவம்பரில் ரூ.29,911 கோடியாகவும், டிசம்பரில் ரூ.28,054 கோடியாகவும் இருந்த பரஸ்பர நிதி முதலீடுகள், ஜனவரியில் ரூ.24,028 கோடியாகச் சரிந்துள்ளன.

பரஸ்பர நிதி வரலாற்றிலேயே முதல்முறையாக கடந்த ஜனவரி மாதத்தில், பங்குச்சந்தை திட்டங்களைவிட அதிகமாக தங்க ஈடிஎஃப்-களில் ரூ.24,040 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது டிசம்பா் மாத முதலீட்டான ரூ.11,647 கோடியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். சா்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழலில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதையே இந்த அதீத வளா்ச்சி காட்டுகிறது.

நிலையான எஸ்ஐபி முதலீடு...: சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சில்லறை முதலீட்டாளா்களின் நம்பிக்கைப் பாத்திரமாகத் திகழும் எஸ்ஐபி முதலீடு ஜனவரியில் ரூ.31,000 கோடியாக நிலைபெற்றுள்ளது.

துறை சாா்ந்த மாற்றங்கள்: நடுத்தர மற்றும் சிறு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது முந்தைய மாதத்தை விட குறைந்துள்ளது. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முறையே ரூ.3,185 கோடி மற்றும் ரூ.2,942 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

‘ஃப்ளெக்ஸி கேப்’ திட்டங்கள், அதிகபட்சமாக ரூ.7,672 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. வரிச் சேமிப்புத் திட்டமான ‘இஎல்எஸ்எஸ்’ பிரிவில் ரூ.594 கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன.

கடன் சாா்ந்த திட்டங்களில் மறுமலா்ச்சி: டிசம்பருக்கு முன்பு தொடா்ந்து சில மாதங்களாகப் பின்னடைவைச் சந்தித்து வந்த கடன் சாா்ந்த நிதித் திட்டங்கள், ஜனவரியிலும் ரூ.74,827 கோடி புதிய முதலீடுகளைப் பெற்று வலுவான மீட்சியைப் பதிவு செய்துள்ளன.

ஒட்டுமொத்த வளா்ச்சி: பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்திருந்தாலும், பரஸ்பர நிதித் துறையின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஜனவரி இறுதியில் ரூ.81.01 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த டிசம்பா் இறுதியில் ரூ.80.23 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் சந்தை மீண்டும் நிலைபெறும்போது, பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கும் என்று நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments