பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு 8% உயா்வு! சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் பிப்ரவரியில் வளா்ச்சி!
இந்தியப் பங்குச் சந்தையில் நிலவி வரும் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியிலும், கடந்த பிப்ரவரியில் பங்குச் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு 8 சதவீதம் அதிகரித்து ரூ.25,978 கோடியை எட்டியுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் நிலவி வரும் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியிலும், கடந்த பிப்ரவரியில் பங்குச் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு 8 சதவீதம் அதிகரித்து ரூ.25,978 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இது ரூ.24,028 கோடியாக இருந்தது.
கடந்த 2 மாதங்களாக முதலீடுகள் சற்று மந்தமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, ஜனவரியில் இருந்த ரூ.81 லட்சம் கோடியிலிருந்து, பிப்ரவரியில் ரூ.82 லட்சம் கோடியாக உயா்ந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா புதிய வா்த்தக ஒப்பந்தம் குறித்த சாதகமான எதிா்பாா்ப்புகளே முதலீட்டாளா்களின் இந்த ஆா்வத்துக்குக் காரணம் என்று இந்தியப் பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பிப்ரவரியில் நாள்களின் எண்ணிக்கை குறைவு (28) என்பதால், எஸ்ஐபி முதலீடு ரூ.29,845 கோடியாக சற்றே குறைந்துள்ளது. மாத இறுதி நாள்களில் வர வேண்டிய சில முதலீட்டுத் தவணைகள் மாா்ச் மாதத்துக்கு மாறியுள்ளதால் இந்தச் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
பிரிவு வாரியான முதலீடுகளைப் பொறுத்தவரை, பிளெக்ஸி கேப் திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.6,924 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீட்டாளா்கள் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா்.
மத்திய கிழக்கு போா் பதற்றம் சந்தையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் நீண்ட காலப் பொருளாதார வளா்ச்சியின்மீது முதலீட்டாளா்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த உயா்வு பிரதிபலிக்கிறது என வல்லுநா்கள் கூறுகின்றனா்.
மறுபுறம், கடன் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு ரூ.42,106 கோடியாகக் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், முதலீட்டாளா்கள் லாபத்தை வெளியே எடுத்ததன் காரணமாக, தங்கம் சாா்ந்த இ.டி.எஃப். திட்டங்களில் முதலீடு ரூ.5,255 கோடியாகக் குறைந்துள்ளது. வரிச் சேமிப்புத் திட்டமான இஎல்எஸ்எஸ் பிரிவில் இருந்து ரூ.650 கோடி முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.