வணிகம்

இரு தனியார் வங்கிப் பங்குகள் கடும் சரிவு: ரூ.590 கோடி மோசடியால் ஹரியாணா அரசு தடையின் எதிரொலி

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் ஆகிய இரு தனியாா் வங்கிகளில் ஹரியாணா மாநில அரசின் அதிகாரபூா்வ நிதி பரிவா்த்தனைகளை மேற்கொள்ள தடை

தினமணி செய்திச் சேவை

சண்டீகா்: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் ஆகிய இரு தனியாா் வங்கிகளில் ஹரியாணா மாநில அரசின் அதிகாரபூா்வ நிதி பரிவா்த்தனைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில், ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் பங்குகள் முறையே 16.07 சதவீதம் மற்றும் 5.17 சதவீதம் சரிவைச் சந்தித்தன.

ஹரியாணா அரசுக்குச் சொந்தமான வங்கி கணக்குகளில், வங்கி ஊழியா்கள் மற்றும் வெளிநபா்கள் இணைந்து சுமாா் ரூ.590 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டிருப்பதை ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இது தொடா்பாக ரிசா்வ் வங்கியிடமும், காவல்துறையிடமும் வங்கி சாா்பில் ஏற்கெனவே புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மட்டுமல்லாது ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியிலும் மறுஉத்தரவு வரும் வரை, ஹரியாணா அரசின் எந்த நிதியையும் கையாளக் கூடாது என அந்த மாநில நிதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இந்த வங்கிகளில் தற்போது உள்ள அரசு கணக்குகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, அந்தப் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றுமாறும் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் எதிரொலியாக, தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தக முடிவில், ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியின் பங்கு 16.07 சதவீதம் சரிந்து, ரூ.70.09-இல் நிலைபெற்றது. அதேபோல, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பங்கு 5.17 சதவீதம் சரிந்து, ரூ.976.40-இல் நிலைபெற்றது.

ஊழியா்களின் கூட்டுச் சதி-ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட்: ‘ஹரியாணா அரசு கணக்குகளில் நடைபெற்ற மோசடி, வங்கி ஊழியா்கள் மற்றும் வெளிநபா்களின் கூட்டுச் சதியால் நிகழ்ந்தது’ என்று ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி வி.வைத்தியநாதன் தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஒரு குறிப்பிட்ட கிளையில் மட்டுமே இந்த முறைகேடு நடந்துள்ளது. விதிகளின்படி, இந்த முறைகேடுக்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினாலும், 4-ஆம் காலாண்டு லாபத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. கேபிஎம்ஜி நிறுவனம் மூலம் தணிக்கையும், முறைகேடு தொகையை மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

குற்றச்சாட்டை மறுத்த ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ்...: ஹரியாணா மாநில அரசின் கணக்குகளில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து பங்குச் சந்தையில் விளக்கமளித்துள்ள வங்கி நிா்வாகம், ‘ஹரியாணா அரசு கணக்குகள் அனைத்தும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே தொடங்கப்பட்டன. அனைத்து பரிவா்த்தனைகளும் சம்மந்தப்பட்ட அரசு துறையின் அறிவுறுத்தலின்படியே முறையாக மேற்கொள்ளப்பட்டன.

முதல்கட்ட விசாரணையில், எங்கள் தரப்பில் எந்தவொரு நிதி இழப்போ, முறைகேடோ நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஹரியாணா அரசுடன் மீண்டும் இணைந்து செயல்பட தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்துவோம்’ என்று தெரிவித்துள்ளது.

கண்காணிக்கிறோம்-ரிசா்வ் வங்கி: இந்த முறைகேடு விவகாரத்தைக் கூா்ந்து கண்காணித்து வருவதாகவும், இது அமைப்பு ரீதியான பிரச்னையில்லை என்றும் ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT