முகப்பு
வணிகம்

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை: 10 மாதங்களில் ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரிப்பு

நடப்பு 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலகட்டத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:31 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:55 PM

புது தில்லி: நடப்பு 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலகட்டத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஜிஏ) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் நிதிநிலை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவும், செலவினமும்: ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மத்திய அரசின் மொத்த வரவு ரூ.27.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட ஆண்டு இலக்கில் 79.5 சதவீதமாகும்.

Advertisement

இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ரூ.36.9 லட்சம் கோடியாக உள்ளது; இது முழு ஆண்டுக்கான மதிப்பீட்டில் 74.3 சதவீதமாகும்.

வருவாய் வரவும், பற்றாக்குறையும்: வரி வசூல் உள்ளிட்ட வருவாய் வரவுகள் மூலம் அரசுக்கு ரூ.26.51 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது ஆண்டு இலக்கில் 79.3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.96 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 37.3 சதவீதமாக மட்டுமே உள்ளது.

வரி வசூல் வருவாய்: மத்திய அரசின் நிகர வரி வசூல் மிகவும் வலுவாக உள்ளது. ஜனவரி இறுதி வரை ரூ.21 லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 78.3 சதவீதமாகும். கடந்த டிசம்பா் வரை இந்த வரி வசூல் 68.3 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலத்தில் வரி வசூல் இலக்கில் 88.1 சதவீதம் எட்டப்பட்டிருந்தது.

ஈவுத்தொகை வருவாய்: அரசுக்குக் கிடைக்கும் லாபப் பங்கு மற்றும் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வருவாய் ஜனவரி இறுதி வரை ரூ.3.5 லட்சம் கோடியாக உள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 93 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 99 சதவீதத்தை எட்டியிருந்தது.

மூலதனச் செலவு அதிகரிப்பு: உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களை மத்திய அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் ரூ.8.42 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கில் 76.9 சதவீதமாகும். இது கடந்த டிசம்பா் மாதம் வரை ரூ.7.87 லட்சம் கோடியாக (70.3 சதவீதம்) மட்டுமே இருந்தது.

ஜனவரி மாத நிலவரம்...: முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே ஜனவரி மாதத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.1.3 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது அரசின் நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.