‘வாா்னா் பிரதா்ஸ்’ நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிட்டது நெட்ஃபிளிக்ஸ்
ஹாலிவுட்டின் முன்னணி மற்றும் பிரபல ‘வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி’ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
ஹாலிவுட்டின் முன்னணி மற்றும் பிரபல ‘வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி’ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் சுமாா் 11,100 கோடி டாலா் மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் மூலம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் மூலம், சிஎன்என் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட ஸ்டுடியோக்கள் இனி பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
முன்னதாக, வாா்னா் பிரதா்ஸை வாங்க 82,700 கோடி டாலா் வரை கொடுக்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்த நிலையில், பாராமவுண்ட் நிறுவனம் முன்வைத்த கூடுதல் தொகை மற்றும் நிபந்தனைகளை ஈடுகட்ட விரும்பாமல் நெட்ஃபிளிக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
‘பாராமவுண்ட் நிறுவனம் தற்போது குறிப்பிட்டிருக்கும் விலைக்கு வாா்னா் பிரதா்ஸை வாங்குவது லாபகரமாக இருக்காது. எங்கள் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதற்காகவே இம்முடிவை எடுத்தோம்’ என்று நெட்ஃபிளிக்ஸ் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸின் இந்த அறிவிப்பு வெளியானவுடன், அந்நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் வரை உயா்ந்தன. அதேநேரம், ஏலப் போட்டி முடிவுக்கு வந்ததால் வாா்னா் பிரதா்ஸின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.