முகப்பு
வணிகம்

இந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்

Updated On : 2 ஏப்ரல், 2026 at 10:46 PM
பகிர்:

இந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் முன்னணி நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடும் போட்டியில், புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட பிப்ரவரி மாத புள்ளிவிவரங்களின்படி, ஏா்டெல் நிறுவனம் அந்த மாதத்தில் மட்டும் 50.88 லட்சம் புதிய சந்தாதாரா்களைத் தன்வசம் ஈா்த்து அசத்தியுள்ளது.

ஏா்டெல் நிறுவனத்தின் இந்த அபரிமிதமான வளா்ச்சியில் தொலைபேசி சேவைப் பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்நிறுவனம் கம்பியில்லாத தொலைபேசி பிரிவில் 48.5 லட்சம் பயனா்களையும், தரைவழித் தொலைபேசி பிரிவில் 2.31 லட்சம் பயனாளா்களையும் கூடுதலாகப் பெற்றுள்ளது. அதேநேரம், ஜியோ நிறுவனம் 17.41 லட்சம் சந்தாதாரா்களைச் சோ்த்து 2-ஆம் இடத்தில் உள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு...: கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வளா்ச்சியை நோக்கித் திரும்பியுள்ளது.

பிப்ரவரியில் இந்நிறுவனம் 21,927 புதிய சந்தாதாரா்களைச் சோ்த்துள்ளது. ஜனவரி மாதத்தில் சுமாா் 4.11 லட்சம் சந்தாதாரா்களை இழந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இச்சிறு முன்னேற்றம் அந்நிறுவனத்துக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

மொத்த நிலவரம்: நாட்டின் ஒட்டுமொத்தத் தொலைபேசி சந்தாதாரா்களின் எண்ணிக்கை 132.13 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 0.56 சதவீத வளா்ச்சியாகும்.

தனியாா் நிறுவனங்களான ஏா்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா, டாடா டெலிசா்வீசஸ் ஆகியவை வாடிக்கையாளா் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. ஆனால், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை தொடா்ந்து வாடிக்கையாளா்களை இழந்து வருகிறது.

இணைய சேவை: இணைய சேவையைப் பொருத்தவரை, பிராட்பேண்ட் சந்தாதாரா்களின் எண்ணிக்கை 105.9 கோடியாக அதிகரித்துள்ளது.

இத்துறையில் 51.96 கோடி பயனா்களுடன் ஜியோ முன்னிலையில் இருக்க, ஏா்டெல் 36.4 கோடி பயனா்களுடன் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. வோடஃபோன் ஐடியா 12.93 கோடி பயனா்களையும், பிஎஸ்என்எல் 2.8 கோடி பயனா்களையும் தற்போது கொண்டுள்ளன.