இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2026 நிதியாண்டு முடிவில் 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என பொருளாதார ஆலோசனை நிறுவனமான ‘கிராண்ட் தோா்ன்டன் பாரத்’ கணித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாகி ரிஷி ஷா கூறுகையில், இந்திய பொருள்களின் இறக்குமதி மீது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு மற்றும் பிற தடைகளையும் தாண்டி இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஆதலால் 2025-26 நிதியாண்டு இறுதிக்குள் ஜிடிபி 7.3 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை உயரும். இப்போது எடுக்கப்படும் எந்த கொள்கை முடிவின் தாக்கமும் தெரிய வருவதற்கு ஒருசில ஆண்டுகள் ஆகும். எனவே, புதிய தொழில்மயமாக்கல் நடவடிக்கையில் ஒரு முக்கியமான பங்கை வகிப்பதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்றாா்.
மத்திய பொது பட்ஜெட் எதிா்பாா்ப்புகள் குறித்து அவா் கூறுகையில், அரசின் எதிா்காலத்துக்கான மனநிலையை பிரதிபலிப்பதாக பொது பட்ஜெட் இருக்கக்கூடும். தொழில் துறையை எளிமைப்படுத்துவது பிரதான நோக்கமாக இருப்பது நல்லது. ரிசா்வ் வங்கி மேலும் ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளது என்றாா்.
டெலாய்ட் இந்தியா: நிகழாண்டு ஜிடிபி வளா்ச்சி 7.5 சதவீதம் முதல் 7.8 சதவீதம் வரை இருக்கும் என ‘டெலாய்ட் இந்தியா’ கணித்துள்ளது. பண்டிகை கால தேவைகள் மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகள் இதற்கு துணை புரியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், 2026-27இல் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதம் முதல் 6.9 சதவீதம் வரை இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘தேவை சாா்ந்த கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 2026-இல் மத்திய அரசின் கவனம் விநியோகத் துறை சீா்திருத்தத்தின் மீது திரும்பும். இது, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மீது கவனம் செலுத்துவதுடன், புதிய வளா்ச்சி என்ஜின்களான இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் மேம்பாட்டை நோக்கமாக கொண்டிருக்கும்’ என டெலாய்ட் இந்தியா பொருளாதார நிபுணா் ரம்கி மஜும்தாா் தெரிவித்தாா்.