முகப்பு
வணிகம்

போர்ப் பதற்றத்துக்கு இடையே தங்கம், வெள்ளி விலைகள் குறைவது ஏன்?

போர்ப் பதற்றத்துக்கு இடையே தங்கம், வெள்ளி விலைகள் குறைவது பற்றி..

Updated On : 10 மார்ச், 2026 at 12:50 PM
தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI
பகிர்:

போர்ப் பதற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைகளின்போது தங்கம், வெள்ளி விலைகள் உயரும் என்று நம்பப்பட்டு வந்த வழக்கத்துக்கு மாறாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன.

சர்வதேச அளவில் நிலவும் போர் சூழலுக்கு இடையே கடந்த ஒரு சில நாள்களாக தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன.

மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.17,209 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,37,672க்கும் விற்பனையானது. இதுவே 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,26,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

போர் தொடங்கி 10 நாள்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,31,344க்கும், 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,20,400க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த பத்து நாள்களில் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதுபோல, மார்ச் 1ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.325 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.300 ஆக குறைந்துள்ளது.

விலை மதிப்புள்ள உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளி போன்றவை, வழக்கமாக, போர்க் காலங்களில் பாதுகாப்பான சொத்துகள் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் அதிகம் முதலீடு செய்வார்கள். அதனால் அதன் விலைகள் உயர்வது வழக்கம். ஆனால், ஆச்சரியத்தக்க வகையில் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூண்டு, இன்று 11வது நாளை எட்டியிருக்கும் நிலையில், தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன.

இதற்கு மிகச் சிறந்த பதிலாகக் கிடைத்திருப்பது, சர்வதேச அளவில் நிலையற்ற சூழல் எழுந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை அமெரிக்க நிதித் துறை மற்றும் டாலர் மதிப்பில் இருக்கும் சொத்துகள் மீது குவித்து வருகிறார்கள் என்பதாக உள்ளது.

அது மட்டுமல்லாமல், ஜனவரி இறுதி வரை தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் மீதான முதலீடுகளில் அதிக பணத்தைக் குவித்து பெரிய அளவில் லாபமும் பார்த்திருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், டாலர் மற்றும் அமெரிக்க பத்திரங்களுக்கான முதலீடுகளில் உருவான ஏற்றத்திற்குப் பிறகு மற்றொரு பணப்புழக்க நெருக்கடியும் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தங்க வணிக தளமான ஆகமண்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ரெனிஷா சாய்னானி இது பற்றி கூறுகையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஒரு பெரிய பாதுகாப்பான முதலீட்டு உயர்வு இல்லாததற்கு, குறுகிய கால பணப்புழக்க இயக்கவியல்தான் பெரும்பாலும் காரணம் இருந்திருக்கும். இதுதான் அடிப்படைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

எப்போது சர்வதேச அளவில் போர்ப் பதற்றம் உருவாகிறதோ, அப்போது முதலீட்டாளர்கள் முதலில் அடிப்படை தேவைகளுக்காக பணமாக மாற்றும் நடவடிக்கைகளில்தான் தீவிரத்தைக் காட்டுவார்கள், மற்றும் நிறுவன பங்குகள் மீது விழும் அழுத்தத்தையும் அவர்கள் எதிர்பார்த்தே இருப்பார்கள், அதனால் பங்குகளை விற்பனை செய்வார்கள். அதனுடன் பாதுகாப்பான சொத்து என்று கூறப்படும் தங்கம், வெள்ளியையும் விற்க முன்வருவார்கள்.

இந்த நிலையில்தான், மறுபக்கம் டாலர் மற்றும் அமெரிக்க பத்திரங்கள் வெளியீடு, முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும்போது, தங்கம், வெள்ளியை தவிர்த்துவிட்டு இதுபோன்ற முதலீடுகள் பக்கம் திரும்பியிருப்பார்கள் என்று எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

summary

On the decline in gold and silver prices amid war tensions..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.