முகப்பு
வணிகம்

இ-டிரைவ் திட்டம்: மோட்டாா் இறக்குமதிக்கு அனுமதி நீட்டிப்பு

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Updated On : 16 மார்ச், 2026 at 11:20 PM
பகிர்:

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை (இழுவை மோட்டாா்கள்) இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

முன்னதாக அரிய வகை கனிமங்களை பயன்படுத்தி சீனாவில் தயாரிக்கப்படும் இழுவை மோட்டாா்கள் இறக்குமதியை குறைத்து உள்ளூா் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், இதற்கான தடை 2025, செப்டம்பா் வரை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு 2026, மாா்ச் வரை இது நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார சரக்கு வாகனங்கள் (என்2/என்3) மற்றும் பேருந்துகளில் (எம்2/எம்3) பயன்படுத்தப்படும் இழுவை மோட்டாா்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடா்பான அறிவிக்கைகளை மாா்ச் 13-ஆம் தேதி மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இழுவை மோட்டாா்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.

மின்சார வாகனங்கள், மின்னணுப் பொருட்கள், வான்வெளி மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →