தமிழகத்தில் உள்ள வன விலங்கு சரணாலயங்களில் முதுமலை சரணாலயம் அதிகம் புகழ்பெற்றது.
முதுமலை என்ற சொல்லைக் கேட்டாலே யானைகள் தான் நமக்கு நினைவுக்கு வரும். சிறியவர் முதல் பெரியவர் வரை யானை என்ற பெரிய விலங்கை பார்க்கும் ஆவல் யாருக்குமே குறைந்ததில்லை. அதிலும் யானைகள் சுதந்திரமாகவும், இயற்கையாகவும் உலா வரும் முதுமலை பகுதிக்கு செல்வதென்றால் யார் தான் விரும்ப மாட்டார்.
முதுமலை என்ற சொல்லுக்கு பழமையான மலைப்பகுதி என்று பொருள். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த முதுமலை தமிழகத்துடன் கேரளத்தின் முத்தங்கா வனச்சரணாலயம் மற்றும் கர்நாடகத்தின் பந்திப்பூர் வனச் சரணாலயம் ஆகிய 3 மாநிலங்களின் வனப்பகுதிகளையும இணைக்கும் முக்கூடலாகும். சுமார் 321 சதுர கி.மீ. பரப்பளவிலான முதுமலை கடந்த 1940ம் ஆண்டில் வனச் சரணாலயமாகவும், தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து யுனெஸ்கோ அமைப்பினரால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உருவாக்கப்பட்டபோது, முதுமலை வனச் சரணாலயத்தை உள்ளடக்கியே உயிர்ச்சூழல் மண்டலமும் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் முதுமலை வனச்சரணாலயம் முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம் ஏதோ வனவிலங்குகளின் வாழ்விடமாக மட்டுமே உள்ளதென நினைத்து விடாதீர்கள். வன விலங்குகள் மட்டுமின்றி எண்ணற்ற பறவை இனங்களும், மரங்கள், செடிகள், கள்ளிகள் என வகை வகையாகவும் உள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான யானைகளுடன், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புலிகளும உள்ளன. இப்பகுதி புலிகளின் பாதுகாப்புக்கு உகந்த பகுதி என்பதாலேயே இதை புலிகள் காப்பகமாகவும் அறிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகப்பகுதி 3 வகையான சூழலைக்கொண்டது. ஒருபுறம் இயற்கை சோலைகளும், சதுப்பு நிலங்களும் அமைந்துள்ளன. மற்றொரு புறத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பரந்த தேக்கு மரக்காடுகள் உள்ளன. இன்னொரு புறத்திலோ முட்செடிகளும், கள்ளிகளும் நிறைந்துள்ளன. இப்பகுதி மட்டுமே மழைக் குறைவான பகுதியாகும்.
முதுமலையில் ஓடும் மாயார் ஆறு இங்குள்ள விலங்குகளுக்கு நீராதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில் யானைப்புல் எனப்படும் பிரமாண்ட மூங்கில் மரங்களுடன் தேக்கு, ஈட்டி, மட்டி, வேங்கை, வெண்தேக்கு, பலா, நெல்லி, காட்டு அத்தி உள்ளிட்ட எண்ணற்ற மர வகைகளும் உள்ளன.
அதேபோல யானை, புலி ஆகியவற்றுடன் சிறுத்தை, காட்டெருமை, கடமான், புள்ளி மான், குரைக்கும் மான், சுருள் மான், கரடி, செந்நாய், கழுதைப்புலி, நரி, மங்கூஸ், சிறுத்தைப்பூனை, கருங்குரங்கு, நீலகிரி லங்கூர், காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, உடும்பு, மலைப்பாம்பு, மயில், பறக்கும் அணில், மலபார் அணில், கழுகு எனவும், பறவைகளில் ஹார்ன்பில், மினிவெட், பிளை கேட்சர், மரங்கொத்திகள் என 230க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் உள்ளன.
இவை எல்லாவற்றையும் பார்க்க முடியுமா என்றால் முடியும். ஆனால், அதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். மிருகக்காட்சி சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளுக்கும், முதுமலையில் இயற்கையாக சுற்றித்திரியும் விலங்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால், அவரவர் அதிர்ஷ்டத்தின்படியே விலங்குகளை காண முடியும். ஆனால், அதிர்ஷ்டம் கொஞ்சமாவது இருக்கும்.
இது மட்டுமின்றி முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் மிகவும் சிறப்பானது. இங்கு தற்போது 25 யானைகள் வளர்க்கப்படுகின்றன. புதிய வரவான செம்மொழியான் முதல் 58 வயது கடந்து ஓய்வூதியம் பெறும் பாமா வரையிலும் இங்குள்ளன. அத்துடன் பிற காட்டு யானைகளிடமிருந்து மனிதர்களையும், விளைநிலங்களையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கும்கி எனப்படும் பயிற்சி யானைகளும் இங்குள்ளன.
ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகளை பார்க்கும் காட்சியே ரம்மியமானதாகும். இந்த யானைகளைக் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் யானை சவாரியும் நடத்தப்படுகிறது. ஒரு யானைக்கு ரூ.500 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு யானையின் மீது 4 பேர் செல்லலாம்.
இவ்வளவு வளமும், இயற்கை எழிலும், மிகச்சிறந்த சுற்றுச்சூழலும் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்து ஒரு நாளாவது தங்கினால்தான் இதன் அருமை புரியும். இங்கு தங்குவதற்கு வனச் சரணாலயத்தின் சார்பில் தங்கும் விடுதிகளும் உள்ளன. இயற்கையான சூழலில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதிகளில் அறைக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை நாளொன்றுக்கு வாடகையாக வசூலிக்கப்படுகிறது. குழுவாக வருவோருக்கு டார்மென்டரி வசதிகளும் உள்ளன. உணவும் அங்கேயே சமைத்துக் கொடுக்கப்படுகிறது. இதற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் வனத்துறையினரின் வாகனங்களில்தான் சரணாலயப் பகுதிக்குள் சென்று வர முடியும். காலையில் 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு நபருக்கு ரூ.40 கட்டணமாகும்.
உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாபாதை வழியாக 36 கி.மீ. தொலைவிலும், கூடலூர் வழியாக 67 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி, தங்கும் வசதி, வாகன சவாரி உள்ளிட்டவற்றிற்கு முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
தெப்பக்காட்டிலுள்ள அலுவலகத்தை 0423 2526235 என்ற எண்ணிலும், உதகையிலுள்ள கள இயக்குநர் அலுவலகத்தை 0423 2445971 மற்றும் 2444098 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
கோடைக் காலத்தில் வெயிலும், அனலும் தாக்கும் போது, அதில் இருந்து ஒரு சில நாட்களாவது தப்பித்து, இயற்கையோடு இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்போடு அமைந்திருக்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் நமது கோடை விடுமுறையை கழிக்கலாமே..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.