முகப்பு
அரசியல் அரங்கம்

தொண்டர்கள் விரும்பும் கூட்டணி எது?

நீங்கள் எப்படிப்பட்ட கூட்டணியை விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்; எந்தக் கட்சிகளையெல்லாம் நம் கூட்டணியில் சேர்க்கலாம் என்று விரும்புவதும் எனக்குத் தெரியும். நிச்சயம் நீங்கள் விரும்பும் கூட்டண

அரசியல் அரங்கம்

தொண்டர்கள் விரும்பும் கூட்டணி எது?

நீங்கள் எப்படிப்பட்ட கூட்டணியை விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்; எந்தக் கட்சிகளையெல்லாம் நம் கூட்டணியில் சேர்க்கலாம் என்று விரும்புவதும் எனக்குத் தெரியும். நிச்சயம் நீங்கள் விரும்பும் கூட்டண

Updated On : 28 ஜூலை, 2025 at 4:06 AM
பகிர்:

நீங்கள் எப்படிப்பட்ட கூட்டணியை விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்; எந்தக் கட்சிகளையெல்லாம் நம் கூட்டணியில் சேர்க்கலாம் என்று விரும்புவதும் எனக்குத் தெரியும். நிச்சயம் நீங்கள் விரும்பும் கூட்டணியை நான் அமைப்பேன். அது வெற்றி கூட்டணியாக இருக்கும். சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். ஒப்பந்தம் உருவான பின், கூட்டணி பற்றிய இறுதி முடிவு சில நாள்களில் அறிவிக்கப்படும்''.

 இது சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தின்போது, கட்சியினர் மத்தியில் ஜெயலலிதா பேசியது.

 ஜெயலலிதா இவ்வாறு பேசியதும் அ.தி.மு.க.வினர் மத்தியில் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்துக்கு அளவே இல்லை.

 எனினும், அ.தி.மு.க.வினர் விரும்பும் கூட்டணி எதுவென்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே, எத்தகைய கூட்டணியை அம்மா விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல மற்ற கட்சியினருக்கும் தொற்றிக்கொண்டது.

 அ.தி.மு.க.வின் சில இரண்டாம் நிலைத் தலைவர்கள், சில மாவட்ட நிர்வாகிகளிடம் பேச்சுக் கொடுத்து, காங்கிரஸ் தலைமையுடன் ஜெயலலிதா பேசி வருகிறாரா என்று விசாரித்தபோது, இப்போதைக்கு பேசவில்லை என்பதைப் போல தலையை ஆட்டினார்கள்.

 இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேட்டோம். அதில் என்ன விசேஷம் இருக்க முடியும் என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.

 விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேசி வருகிறதா என்று கேட்ட போது, புன்னகைத்தார்கள். தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று ஒப்புக்கொள்வதைப் போல அவர்களின் புன்னகை இருந்தது.

 அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை இடதுசாரி கட்சிகளின் சில முன்னணித் தலைவர்களும் உறுதி செய்கின்றனர்.  

 எனினும், அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே உள்ளதாகக் கருதப்படும் இடதுசாரி கட்சிகள் மற்றும் ம.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை இதுவரை எதுவும் பேசவில்லை என்பதும் உறுதியாக தெரிய வருகிறது.

 காங்கிரஸ் கட்சி தி.மு.க. அணியிலேயே தொடருமா அல்லது தி.மு.க.வுடன் முரண்பாடுகள் அதிகமாகி, அ.தி.மு.க. அணிக்கு தாவுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

 எனினும், காங்கிரஸ் கட்சி தங்கள் பக்கம் வருவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், தேர்தல் நெருங்கும் வரை கூட அந்தக் கட்சிக்காக காத்திருக்க அ.தி.மு.க. தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

 அதே நேரத்தில், இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்கள் அணியில்தான் உள்ளன என்பதை இப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

 ஏனெனில், இடதுசாரி கட்சிகள் மற்றும் ம.தி.மு.க. தங்கள் அணியில் இருப்பதை உறுதி செய்து விட்டால், அதுவே காங்கிரஸ் கட்சி தங்கள் அணிக்கு வருவதற்கு பெரும் தடையாகி விடும் என்று அ.தி.மு.க. கருதுகிறதாம்.

 ஆனால், தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அ.தி.மு.க. - தே.மு.தி.க. அணியை முதலில் உறுதி செய்து கொள்வோம். பிறகு, காங்கிரஸ் வந்தால், அந்தக் கட்சியை அணியில் சேர்ப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அதிமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை, காங்கிரஸ் கட்சி தி.மு.க. அணியில்தான் தொடரும் என்று உறுதியாக தெரிந்தால், அதன் பின், இடதுசாரி கட்சிகள் மற்றும் ம.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் அ.தி.மு.க. தலைமை கருதுகிறதாம்.

அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாடு இடதுசாரி கட்சிகளை வருத்தமடையச் செய்துள்ளதாக தெரிகிறது. எனினும், தி.மு.க. - காங்கிரஸ் அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று இடதுசாரிகள் உறுதியாக நம்புகிறார்கள். இதை ஜெயலலிதாவும் நம்பும் வரை, அமைதி காப்பதே நல்லது என்பதுதான் இடதுசாரிகளின் இப்போதைய திட்டம் என்று கூறப்படுகிறது.

 இதற்கிடையே, தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை சில நாள்களில் அறிவிப்பேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளதால், எப்போது அறிவிப்பார் என்ற ஆர்வம் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, எல்லா கட்சியினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

 தை பிறந்தால், வழி பிறக்குமா?

முழு கட்டுரையைப் படிக்க →