கட்டாய தேர்தல் பணி: கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி!
சென்னை, மார்ச் 24: தேர்தல் நாளில் வாக்குப்பதிவை நேரடியாகப் பதிவு செய்யும் வகையில் மடிக் கணினியை (லேப் டாப்) கையாளும் பணியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நியமிக்கப்பட உ
சென்னை, மார்ச் 24: தேர்தல் நாளில் வாக்குப்பதிவை நேரடியாகப் பதிவு செய்யும் வகையில் மடிக் கணினியை (லேப் டாப்) கையாளும் பணியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. (எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்), பி.டெக் (எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்), பி.சி.ஏ, எம்.சி.ஏ, டி.சி.ஏ, கணினி அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கட்டாயமாக தேர்தல் பணியாற்ற ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாவட்டத் தலைமையிடங்களில், தேர்தலுக்கு முந்தைய நாளான, வரும் ஏப்ரல் 12-ம் தேதி சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில்... தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மொத்தமுள்ள 56 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 20 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. இதேபோல 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீஸôர், சிறப்புக் காவல் அணியினர், அதிதீவிர அதிரடிப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என 4 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர்,உதகை, திண்டுக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பதற்றம் நிறைந்த 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நாளில் (ஏப்ரல் 13) வாக்குப்பதிவை நேரலையாக ஒளிப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வெப் கேமராக்களில் காட்சிப் பதிவு: இதன்படி இந்த வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா, கணினி மற்றும் அகண்ட அலைவரிசையுடன் (பிராட் பேண்ட்) கூடிய இணையதள இணைப்பு வசதி மூலம் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
இதன் மூலம், வாக்குப்பதிவின் போது ஏதேனும் முறைகேடு அல்லது வன்முறை சம்பவங்கள் நடந்தால் அந்தந்த மாவட்ட, மாநில தலைமை தேர்தல் அலுவலகங்களில் இருந்து கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவின்போது, ஒவ்வொரு வாக்காளரின் வருகையும் வெப்கேமரா விடியோ காட்சிப் படமாக பதிவு செய்து தலைமையிடத்துக்கு அஞ்சல் (வெப்கேஸ்ட்) செய்யப்படும்.
மடி கணினிகளைக் கையாளும் பணி: இதற்காக சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா இணைக்கப்பட்ட மடிக்கணினிகளின் எண்ணிக்கை, பிராட்பேன்ட் இணைப்பு வசதி, பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்கள், கணினி சார்ந்த படிப்புகளைப் பயிலும் 3-ம் ஆண்டு மாணவர்கள் குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில் கணினி சார்ந்த படிப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளின் பட்டியல், அவர்களிடம் இருந்து தனித்தனியே பெறப்பட்ட கையொப்பத்துடன் கூடிய ஒப்புதல்
கடிதம் ஆகியவை பெறப்பட்டுள்ளன.
இந்த மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி நாள் (ஏப்ரல் 12), தேர்தல் நாளில் பணியாற்றவும் (2 நாள்களுக்கு தலா ரூ. 350) மொத்தம் ரூ. 700 ஊக்க ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி பயிலும் தங்களுக்குள்ள அதிக பாடச் சுமையுடன், சுற்றுத் தேர்வுகளை (சைக்கிள் டெஸ்ட்) இந்த மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக கல்லூரி நிர்வாகங்கள் தரும் நெருக்கடியால் கட்டாயமாக தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் மடிக்கணினிகளைக் கையாளும் பணியில் தலா ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்புக்கு உத்தரவாதம்? மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகங்கள் மூலம் ஒப்புதல் கடிதம் பெறும் தேர்தல் அதிகாரிகள், இவர்களின் பாதுகாப்புக்கு எழுத்துப்பூர்வமாக எந்தவித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.
மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரை இவர்கள் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், இவர்களுக்கு காப்பீடோ வசதியோ அல்லது சக மாணவர்கள், பெற்றோர்களிடமோ தொடர்பு கொள்ள எந்த வாய்ப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் ஒருவித மன அழுத்தமான சூழ்நிலையில் உள்ளனர்.
அச்சத்துடன் இருக்கும் மாணவிகள் சிலர் தங்களது கல்லூரி நிர்வாகங்களிடம் தங்களது இயலாமை குறித்து தெரிவித்தாலும், மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம்தான் இதுகுறித்து முறையிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனராம்.
இதனால், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட உள்ள 12 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.