மரணமில்லாப் பெருவாழ்வு

20. பசி ருசி அறியாது

‘பசித்துப் புசி’, ‘கூழானாலும் குளித்துக் குடி’, ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பன ஆத்திச்சூடி வாழ்க்கைப் பழமொழிகள்.

டாக்டர் அப்பன்

‘பசித்துப் புசி’, ‘கூழானாலும் குளித்துக் குடி’, ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பன ஆத்திச்சூடி வாழ்க்கைப் பழமொழிகள். பசித்தபின் தான் உண்ண வேண்டும். பசியில்லாத போது, விருந்தின் பொருட்டோ, உணவு நேரம் பொருட்டோ, உண்ணக் கூடாது. உயிர் வாழ்வதற்காகத்தான் உண்ண வேண்டும். உண்பதற்காக வாழக் கூடாது. பசி வந்தால் இயற்கை உணவு எவ்வித சலிப்பும், வெறுப்புமில்லாமல் நன்கு உண்ணலாம். பசி இல்லாத போது சமையல் உணவு மட்டும் சாப்பிட இயலும். பசி இருக்கும் போது, நமது நாக்கு உப்பு, புளி, காரம், எண்ணெய் என எதுவும் எதிர்பார்க்காது. பசி அடங்க வேண்டும். வயிறு நிறைய வேண்டும் எனும் எண்ணத்தில் கிடைத்ததைச் சாப்பிடத் தோன்றும்.

எனவே மணிக்காட்டியில் மணி பார்த்து சாபிடுவதைத் தவிர்ப்போம். பசி இல்லாதபோது, விருந்து எனக் கிடைப்பதையும் சாப்பிடாமல் தவிர்ப்போம்.

மனிதரைத் தவிர உலகில் உள்ள அனைத்துப் பிற உயிரினங்களும் ருசி பாராது, தனக்குரிய இயற்கை உணவை மட்டும் வாழ்நாள் முழுவதும் உண்டு, மிக்க ஆரோக்கியமாக, மருத்துவரை நாடாது, எக்குறையுமின்றி, பூரண உடல் நலத்துடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ருசி பார்த்து உண்ணும் மனிதன்தான் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகிறான்.

அனைத்து சமையல் உணவுகளுக்கும், பழக்கத்தால் ருசியாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவற்றில் ருசி இல்லை. மனிதரது இயற்கை உணவாகியத் தேங்காயும், பழ வகைகளும் தான், உண்மையில் ருசி உள்ளவை. ஆனால் இயற்கை உணவு உண்ணும் பழக்கத்தை பல்லாயிரமாண்டுகளாகத் தவற விட்டுவிட்டதால், ருசி இல்லை என நினைக்கிறோம். நாம் எல்லாம் சமையல் உணவுப் பழக்கத்தில் ஊறிவிட்டதால், இப்போது கொய்யா, வெள்ளரி போன்றவற்றிற்கும் உப்பு, மிளகாய்ப் பொடி கலந்து உண்ண ஆரம்பித்துவிட்டோம்.

நன்கு பசித்து உண்டு வந்தால், அவ்வுணவின் உடலில் சேர்மானம் (Assimilation) அதிக அளவு ஏற்படுகிறது. கழிவு (Elimination) குறைவாக வெளியேறுகிறது. ஆனால் பசி இல்லாது, உணவு உண்டால், உடலில் சேர்மானம் குறைவாகவும், கழிவு வெளியேறுதல் அதிகமாகவும் ஏற்படுகின்றது.

நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில், உணவின் அளவு வயிற்றில் அரைபாகம், தண்ணீர் கால்பாகம், வெற்றிடம் கால் பாகம் எனும் அளவுகோல்படி உண்ண வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றுள்ளனர். இயற்கை உணவு உண்ணும் பழக்கத்தில் தான் இந்த அளவுகோல் பொருந்துகிறது. சமையல் உணவு உண்ணும் பழக்கத்தில் இந்த அளவுகோல் பொருந்துவது இல்லை. அரை வயிறு சமையல் உணவு உண்பதற்குப் பதில் முழு வயிறும் சமையல் உணவு உண்டு, சிறிதளவு தண்ணீர் குடித்து விட்டு வயிறில் வெற்றிடமே இல்லாமல் செய்து விடுகிறோம். வயிற்றில் உணவு உண்டபின், கால் வயிறு வெற்றிடமிருந்தால் தான், உண்ட உணவு நன்கு செரிக்கக் குடல் தசைகள் நன்கு சுருங்கி, விரிந்து அசைவு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு, நன்கு செரிமானம் ஆகிறது; வயிற்றில் வெற்றிடமில்லை எனில், குடல் தசைகள் சுருங்கி, விரிய அசைவு ஏற்பட வாய்ப்பு இல்லாது போகவே செரிமான சிக்கல் ஏற்பட்டு, நாளடைவில் அஜீரணம் உண்டாகி, குடல் புண் உண்டாகி, கடுமையான வயிற்று வலி ஏற்படுகின்றது.

வேளாண்மையில், சாகுபடி செய்யும் நிலம் காய்ச்சல், பாய்ச்சல், வசதி இருந்தால் தான், பயிர் நன்கு செழித்து, வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கும். அதுபோல், நமது வயிறும் காய்ச்சல், பாய்ச்சல் எனும் கோட்பாடு பிரகாரம், நன்கு பசி ஏற்படும் போது வயிறு நன்கு பாய்ச்சல் ஏற்பட்டு நனைகின்றது. இவ்விதம் நமது உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், நமக்கு ஆரோக்கியம், இயல்பாகக் கிட்டும்.

பசி இல்லாது, உணவு உண்டால் நமது வயிறில் போடும் உணவு, கிரகிக்கப் படாது. எச்சமாகி, குப்பையாக மாறுகின்றது. வயிறும் குப்பைத் தொட்டியாக மாறுகின்றது. ஆனால் நமது வயிறு குப்பைத் தொட்டி அல்லது கழிவுத் தொட்டி அல்ல. இரைப்பதான்! சிறுநீரகமும், மலக்குடலும் தான் கழிவு உறுப்புகள். பசி இல்லாது, நாம் உணவு உண்டோமானால், நாளைடைவில் நமது வயிற்றில் செரிமானக் குறைவு ஏற்பட்டு, எஞ்சியுள்ள இரைப்பையில் செரிமானக் குறைவால் தங்கியுள்ள உணவைச் செரிப்பதற்கு, நமது உடல் நமது உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி காய்ச்சல் (Fever) எனும் நோயை உண்டாக்கி காய்ச்சல் நிமித்தம் எந்த உணவையும் உண்ணும் உணர்வு இழந்து, வாயில் கசப்பு ஏற்பட்டு, இயற்கையாக உடல் உண்ணா நோன்பு நிலையை மேற்கொள்கிறது. இரைப்பையில் செரிக்காது, எஞ்சியுள்ள உணவு, காய்ச்சலின் போது ஏற்பட்டுள்ள வெப்ப மிகுதியால் நன்கு செரித்தபின், காய்ச்சலும் தணிகிறது. வாய்க்கசப்பும் மாறி இயல்பு நிலைக்கு வருகிறது. பின்னர் மீண்டும் உணவு உண்ணும் நிலைக்கு உடல் இயல்பாக ஆகிறது. உடலில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடல் நிலைக்கு மாறாக, நாம் உணவை உள்ளே திணித்தால் காய்ச்சலின் வேகமும் சூடும் அதிகமாகும். உடல் இயக்கமும் திணறி, மரணம் கூட சம்பவிக்கும்.

எனவே, நாம் நமது உடலின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளப் பழக வேண்டும். புரிந்துகொண்டு, செயல்பட முயல வேண்டும். புரிந்து கொள்ளாமல் செயல்பட்டால், உடல் இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டு உயிருக்கு ஊறு விளைவிக்கும். மரணமேற்படும், ஆகவே மரணமில்லாப் பெருவாழ்விற்கு நமது உடலைப் புரிந்து செயல்பட வேண்டும். நமது சிந்தனையும், செயலும் உடலின் உள்ளே கடக்க வேண்டும். அதாவது ‘கடவுள்’ என்பதாகும். மாறாக, மருத்துவரை அணுகி, ஒரு சிக்கலைத் தீர்க்கப் பல சிக்கல்களுக்கு நாம் ஆளாகக் கூடாது. பணம் விரையம் செய்யக் கூடாது. உடலை அபத்தமாக்கக் கூடாது. நஞ்சாக்கக் கூடாது.

ஆதலால், இனியாவது நாம் ‘பசித்து உண்போம்; பசி வந்தால் ருசி அறியாது’ உடலையும், உயிரையும் காக்கலாம். மரணமிலாப் பெருவாழ்வு இலக்கை அடையலாம்.

எனது அருமை மிக்க உலக மாந்தரே, ஆரோக்கியத்திற்கும், மரணமிலாப் பெருவாழ்வு மதிக்கும் திசை தெரியாது, திசை மாறிய பறவை போல் திண்டாடுவதற்குப் பதிலாக, இறைவழியாகிய இயற்கை உணவுடன் கூடிய இயற்கையோடு இயைந்த வாழ்வு, இயன்ற அளவு வாழ, மனத்தை திசை திருப்புவோம். பழ உணவு உண்போர் சமுதாயம் படைப்போம். வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

இயற்கை வாழ்வியல் இயக்கத்திற்கு அணி திரட்டுவோம்!!!

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT